தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

  • விக்டோரியா கில்
  • அறிவியல் செய்தியாளர், பிபிசி
பூச்சி

பட மூலாதாரம், ANDRE GUNTHER

உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனால் வெளியிடப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த வண்ணப் பூச்சி வகைகள் குறித்த முதல் தொகுப்பு மதிப்பீட்டின் மூலம் இதை கண்டறிந்துள்ளனர்.

நகரமயமாக்கலும், நிலையில்லாத விவசாயமுமே சதுப்பு நிலங்கள் அழிந்து போவதற்கான காரணம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

தற்போது, 16 சதவீத தும்பிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

சதுப்பு நிலங்கள் நமக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றன என இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனின் இயக்குனர் ஜெனரல் டாக்டர். ப்ருனோ ஒப்ர்லே கூறுகிறார்.

"அவை கார்பனை சேமித்து, சுத்தமான நீர், உணவை நமக்கு தருகிறது. வெள்ள பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் உலகம் அறிந்த உயிரினங்களில் பத்தில் ஒன்றுக்கு வாழ்விடத்தை தருகிறது ஆனால், சதுப்பு நிலங்களும் நீர்நிலைகளும் காடுகளை விட மூன்று மடங்கு வேகமாக அழிக்கப்படுகிறது."

1970ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை, 35 சதவீத சதுப்பு நிலத்தை உலகம் இழந்துவிட்டது என்று மிகச் சமீபத்திய அறிவியல் மதிப்பீடு காட்டுகிறது என்று இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனின் சிவப்புப் பட்டியல் பிரிவின் தலைவர் க்ரேக் ஹில்டன் - டெய்லர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இழப்பின் வீதம் அதிகமாகிக்கொண்டே வருவது போல் தெரிகிறது", என்று கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், OGILVIE+PAGE

"சதுப்பு நிலங்களை, ஆக்கிரமிக்க வேண்டிய தரிசு நிலங்களாக பார்க்கும் பார்வைதான் இதற்கு காரணம். ஆனால், உண்மையில், அவை மிகவும் முக்கியமானவை,"

"இந்த அழகான பூச்சிகளை காட்டுவதன் மூலமும் , அவை ஆபத்தில் உள்ளன என்று குறிப்பிடுவதன் மூலமும், உலகில் உள்ள நீர்நிலைகளை காக்க நாம் மேலும் அதிகம் செயல்பட வேண்டும் என்ற செய்தியைப் பரப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்". என்கிறார்.

வியாழக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட சிவப்புப் பட்டியலுடன், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 40 ஆயிரத்தை கடந்து உள்ளது.

பட மூலாதாரம், LORENZO QUAGLIETTA

இந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில், குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு உயிரினம் அரை-நீர்வாழ் பைரினியன் டெஸ்மேன் ( semi-aquatic Pyrenean desman).

இது அன்டோரா, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள ஆறுகளில் மட்டுமே காணப்படும் ஒரு பாலூட்டி.

இந்த குழாய் வடிவ மூக்கு கொண்ட உயிரினம் "ஆபத்தில் உள்ள" என்ற பட்டியலில் இருந்து "அழிந்து வரும்" பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் நீண்ட உணர்திறன் கொண்ட மூக்கு மற்றும் பெரிய வலை வடிவம் கொண்ட கால்களுடன், இது உலகில் மீதமுள்ள இரண்டு டெஸ்மேன் வகை இனங்களில் ஒன்றாகும்.

பைரேனியன் டெஸ்மேனின் எண்ணிக்கை 2011ம் ஆண்டு முதல் பாதியாக குறைந்துள்ளது. நீர்மின் நிலையம், அணை மற்றும் நீர்த்தேக்கக் கட்டுமானம் மற்றும் விவசாயத்திற்கான நீர் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட மனித செயல்களின் தாக்கங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: