யுக்ரைன் மீது படையெடுக்க தயாராகி வருகிறதா ரஷ்யா?

  • பால் கிர்பி
  • பிபிசி
க்ரைமியாவில் ரஷ்யா பயிற்சிகளை மேற்கொண்டது மேற்கத்திய நாடுகளில் கவலையை ஏற்படுத்தியது

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யப் படைகள் யுக்ரைன் மீதான போருக்குத் தயாராகி வருகின்றனவா என்று மேலை நாடுகளும் யுக்ரைனும் அச்சத்தில் இருக்கின்றன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு யுக்ரைனில் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பிரச்னைகளைக் கிளப்பிய பிரிவினைவாதிகளுக்கும் ரஷ்யா ஆதரவு தந்திருக்கிறது.

படையெடுக்கவோ ஆக்கிரமிக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என்று ரஷ்யா கூறிவந்தாலும், அப்படி ஒருவேளை நடந்தால் கடுமையான, நினைத்துப் பார்க்கவே முடியாத தடைகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. என்னதான் நடக்கிறது?

யுக்ரைன் எங்கே இருக்கிறது?

ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யாவோடு எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் யுக்ரைன், முன்னாள் சோவியத் குடியரசாக இருந்த ஒரு நாடு. ரஷ்யாவுடன் ஆழமான சமூக மற்றும் கலாசாரப் பிணைப்புகள் கொண்டது, யுக்ரைனில் ரஷ்ய மொழி பரவலாகப் பேசப்படுகிறது.

ஐரோப்பிய அமைப்புகளை நோக்கி யுக்ரைன் நகர்வதை ரஷ்யா நெடுங்காலமாக எதிர்த்து வந்திருக்கிறது. நேட்டோவில் இணைவது அல்லது அந்த ராணுவக் கூட்டமைப்பின் ஆயுதங்களைத் தனது நாட்டில் வைத்துக்கொள்வது போன்ற எதையும் யுக்ரைன் செய்யக்கூடாது என்றும் ரஷ்யா வலியுறுத்தியிருக்கிறது.

2014ல் யுக்ரைன் குடிமக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த தங்களது அதிபரின் பதவியைப் பறித்தபோது, யுக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கின் க்ரைமிய தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. டோன்பாஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் யுக்ரைனின் இரண்டு கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான நிலப்பரப்புக்களைப் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் கைப்பற்றினார்கள்.

ஆக்கிரமிப்புக்கான அச்சுறுத்தல் உண்மையிலேயே இருக்கிறதா?

கிழக்கில் இந்தப் பிரச்னை இன்றுவரை தொடர்கிறது. புரட்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கு பீரங்கிகள், தளவாடங்கள், துப்பாக்கிகள் போன்றவற்றை ரஷ்யா அனுப்பியிருப்பதாக யுக்ரைன் தெரிவிக்கிறது. ஆனால் யுக்ரைனின் எல்லைக்கு அப்பாற்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய ராணுவம்தான் பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. மேலை நாடுகளின் புலனாய்வுத் துறைகள், இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன.

இப்போது உடனடியாக அச்சுறுத்தல் வர வாய்ப்பில்லை, ரஷ்யப் பிரதமர் புதின் படை எடுப்பது பற்றி முடிவெடுக்கவும் இல்லை.

அமைதியாக இருக்கும்படி ரஷ்யா வலியுறுத்துகிறது. ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்கே ர்யாப்கோவ், இதுபோன்ற பிரச்னைகள், 1962ல் ஏற்பட்ட கியூபாவின் ஏவுகணைப் பிரச்னை போன்ற ஒரு சிக்கலுக்கு வழிவகுக்கலாம் என்று எச்சரித்துள்ளார். அந்த சூழலில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கிட்டத்தட்ட அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு வந்துவிட்டன.

ஆனால் மேலை நாடுகளின் உளவு அமைப்புகளும் யுக்ரைனும், ஊடுருவல் அல்லது ஆக்கிரமிப்பு, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கலாம் என்று நினைக்கின்றன.

"ஜனவரி மாத இறுதியில் இந்த விஷயம் உச்சத்துக்குப் போய் எல்லாம் தயார் நிலைக்கு வரும்" என்கிறார் யுக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகாவ்.

ஜனவரியின் தொடக்கத்தில் இந்த விஷயத்தில் ஒரு லட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் ரஷ்ய வீரர்கள் ஈடுபடுத்தப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது. சி.ஐ.ஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், "ரஷ்ய ராணுவம், ரஷ்ய பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றை அழித்தொழிக்கும் இடத்துக்கு அதிபர் புதின் நகர்த்திவருகிறார்" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், EPA

நேட்டோவிடமிருந்து சில உத்தரவாதங்களைப் பெற இது ஒரு ராணுவ விளையாட்டாகக் கூட இருக்கலாம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் இதே போன்ற ஒரு சூழல் இருந்தது. ராணுவப் படைகளின் நடமாட்டத்தை சாதாரண பயிற்சிகள் என்று ரஷ்யா அலட்சியமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சில நாட்களில் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. (சில நிபுணர்கள் அந்தப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்கிறார்கள்). எந்த மாற்றங்களும் பெரிதாக நடக்கவில்லை.

டிசம்பர் 7ம் தேதி இந்தப் பதற்றமான சூழலை இலகுவாக்குவது பற்றி அதிபர் ஜோ பைடனும் புதினும் ஒரு வீடியோ அழைப்பில் கலந்து ஆலோசித்தார்கள். ஆனால் சூழலில் மாற்றம் எதுவும் இன்னும் தெரியவில்லை.

ரஷ்யா என்ன சொல்கிறது?

க்ரைமியா மற்றும் கிழக்கு யுக்ரைனுக்கு அருகில் ராணுவப் படைகள் குவிந்திருப்பதாகக் காட்டும் சாட்டிலைட் புகைப்படங்கள் தேவையின்றி பீதியைக் கிளப்புகின்றன என்று ரஷ்யா முதலில் தெரிவித்தது. ஆனால் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அதிபரின் செயலாளர், "எங்கள் இடத்துக்குள் எங்களது ராணுவங்களை நகர்த்த எங்களுக்கு உரிமை உண்டு" என்று வலியுறுத்தினார்.

ரஷ்ய ராணுவப்படைத் தலைவர் வாலெரி கெராசிமோவ் பேசும்போது "படைகளின் நகர்வில் நேட்டோ அதிகமாக கவனம் செலுத்துகிறது. யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப்போகிறது என்பதுபோன்ற ஊடக செய்திகள் பொய்யானவை" என்றார்.

தனது ராணுவத்தில் ஒரு பாதியை, கிட்டத்தட்ட 1,25,000 வீரர்களை யுக்ரைன் கிழக்குப் பகுதியில் வைத்திருக்கிறது என்றும், ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் பகுதிகளில் தாக்குதல் நடத்தக் யுக்ரைன் திட்டமிட்டிருப்பதாகவும் மாஸ்கோ குற்றம்சாட்டியிருக்கிறது.

தனது சொந்தத் திட்டங்களை மூடி மறைக்கவே ரஷ்யா இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுகிறது என்று யுக்ரைன் பதிலளித்தது.

நேட்டோ நாடுகள் யுக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்குவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் ராணுவ செயல்பாட்டை நியாயப்படுத்துவதாக அதன் பதில்கள் அமையலாம்.

ரஷ்யாவின் ஃபெடரேஷன் கவுன்சிலைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான கமிட்டியின் இரண்டாவது முக்கிய நபரான விளாடிமிர் சாபரோவ், டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புரட்சியாளர்களின் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து லட்சம் யுக்ரைன் குடிமக்களிடம் ரஷ்ய பாஸ்போர்டுகள் இருந்தன என்று கூறுகிறார். "புரட்சியாளர்கள் ரஷ்யாவின் உதவியை நாடினால் எங்களது நண்பர்களை நாங்கள் கைவிட மாட்டோம்" என்றும் கூறினார்.

ரஷ்யாவுக்கு என்ன வேண்டும்?

"யுக்ரைனில் ரஷ்யாவின் சிவப்புக் கோடுகளைத் தாண்டவேண்டாம்" என்று மேலை நாடுகளுக்குப் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சிவப்புக் கோடுகள் எப்படிப்பட்டவை?

கிழக்கில் இன்னும் பரவாமல் நேட்டோவைத் தடுப்பது, ரஷ்யாவை அச்சுறுத்தக்கூடிய வகையில் அண்டை நாடுகளில் ஆயுதங்களைக் குவிப்பது...

யுக்ரைன் ஒருவேளை நேட்டோவில் இணைந்தால் ராணுவ நடவடிக்கைகள், ராணுவ தளங்கள், ஆயுதங்கள் ஆகியவையும் கூடவே வந்து சேரும் என்கிறார் அதிபர் புதின்.

கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவுப் பகுதிகளில் யுக்ரைன் துருக்கி ட்ரோன்களை அனுப்பியுள்ளது. கருங்கடலில் மேலை நாடுகள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இவை இரண்டையும் ரஷ்யா கவலையோடு சுட்டிக்காட்டுகிறது.

நவம்பர் மாத இறுதியில் பேசிய புதின், "பொதுவான நல்லறிவும் தங்கள் நாடுகள் மீதும் உலகத்தின்மீதும் பொறுப்புணர்வும் எல்லாருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

ஜூலை 2021ல், ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு விரிவான அறிக்கையை அவர் வெளியிட்டார். இரு நாடுகளின் கூட்டு வரலாற்றைப் பற்றியும், இரண்டு நாடுகளும் ஒரே தேசம் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய யுக்ரைனின் தலைவர்கள் ரஷ்ய எதிர்ப்பு திட்டத்தை செயல்படுத்த விழைகிறார்கள் என்றும் கூறினார்.

"யுக்ரைனை ரஷ்யாவுக்கு எதிராகத் திசைதிருப்ப முயற்சி செய்பவர்கள், தங்கள் சொந்த நாட்டையே அழிப்பவர்களைப் போல" என்றும் கூறினார்.

கிழக்கு யுக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 2015 மின்ஸ் அமைதி ஒப்பந்தம் இன்னும் நிறைவேறவில்லை என்பதும் ரஷ்யாவுக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. பிரிவினைவாதப் பகுதிகளில் சுயேச்சையாகக் கண்காணிக்கப்படும் தேர்தல்கள் நடத்த எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இங்கு உள்ள பிரச்னையில் ரஷ்யாவுக்கு பங்கிருக்கிறது என்பதை ரஷ்யா மறுக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

நேட்டோ எப்படி யுக்ரைனுக்கு உதவுகிறது?

நேட்டோவின் மேற்கு மிலிட்டரி கூட்டமைப்பு தற்காப்புக்கானது. அதன் செயல்துறை ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், எந்த ராணுவ ஆதரவும் இதன் அடிப்படையில்தான் இங்கு இருக்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கருங்கடலில் ஒசாகிவ் மற்றும் அசோவ் கடலில் பெர்ட்யான்ஸ் ஆகிய இரு இடங்களில் கப்பற்படைத் தளங்கள் அமைக்க யுக்ரைனுக்கு உதவ பிரிட்டன் தயாராக இருக்கிறது. அமெரிக்காவின் ஆன்டிடாங் ஜாவலைன் ஏவுகணைகள் யுக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரண்டு கடலோர காவல் படகுகள் அமரிக்காவிலிருந்து யுக்ரைன் கப்பற்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.

"நேட்டோவின் 30 ஆதரவாளர்கள், யுக்ரைன் ஆகியோர்தான் யுக்ரைன் நேட்டோவில் இணையுமா, இணையத் தயாரா என்று முடிவெடுக்க வேண்டும். ரஷ்யாவுக்கு இதில் தலையிட எந்த உரிமையும் இல்லை" என்றார் ஸ்டோல்டென்பெர்க்.

யுக்ரைனுக்காக மேலை நாடுகள் எந்த அளவுக்கு செயல்படும்?

"தனது நிலப்பகுதியின் ஆளுமையை யுக்ரைன் பாதுகாக்க நாங்கள் உதவுவதாக இருக்கிறோம்" என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஒருவேளை யுக்ரைன் தாக்கப்பட்டால் இதுவரை காணாத அளவுக்கு பதிலடி வரும் என்று பைடன் தெரிவித்திருக்கிறார். "ஆனால் நேரடியாக அமெரிக்கப் படைகளை அனுப்புவது பற்றி இன்னும் முடிவாகவில்லை" என்றும் கூறியிருக்கிறார்.

தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளப் போவதாக யுக்ரைன் தெரிவிக்கிறது. "இந்தப் போரை நாங்களே எதிர்கொண்டு சண்டையிடுவோம்" என்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா.

நேட்டோவுடன் யுக்ரைன் சேருவது பற்றியோ வேறு சில விஷயங்களிலோ ரஷ்யாவின் சிவப்புக் கோடுகளை ஒருவேளை அமெரிக்கா அங்கீகரிக்காவிட்டாலும், அதன் உறுதியான பொருளாதார செயல்பாடுகள் யுக்ரைனுக்கு எப்படி உதவும்?

மேலை நாடுகளின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, அவற்றின் முக்கியமான ஆயுதம், யுக்ரைனின் ராணுவத்துக்கு ஆதரவு அளித்து ரஷ்யாவைத் தடுப்பது. பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் விக்கி ஃபோர்ட், பாதுகாப்பு ஆதரவு தருவது பற்றி பிரிட்டிஷ் அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ரஷ்யாவின் வங்கி அமைப்புகளை சர்வதேச ஸ்விஃப்ட் பண பரிவர்த்தனை அமைப்பிலிருந்து துண்டிப்பது ஒரு முக்கியக் கருவியாக இருக்கும். இது பொதுவாகக் கடைசி ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது என்றாலும், இது ரஷ்யாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கும் என்று லாட்வியா தெரிவிக்கிறது.

ஜெர்மனியில் ரஷ்யாவின் நார்ட் ஸ்ட்ரீம் 2 வாயுக்குழாய் அமைப்பைத் திறக்காமல் தடை விதிப்பதும் ஒரு முக்கிய நகர்வாக இருக்கலாம். இதற்கான உரிமம், ஜெர்மனியின் ஆற்றல் அதிகாரிகளால் இப்போது விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட இருக்கிறது. புதிய சான்செலர் ஓலாஃப் ஸ்லோஸ், இந்தக் குழாய்களின் பாதிப்புகள் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்.

ரஷ்யாவின் ஆர்.ஐ.டி.எஃப் நிதியைக் குறிவைப்பது, ரூபிள்களை வேறு பணமாக மாற்றும் வங்கிகளின்மீது கடுமையான நெருக்கடிகளை விதிப்பது ஆகியவையும் சில செயல்பாடுகளாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: