சவுதி அரேபியாவில் விமர்சன சிந்தனையாளர்களை மாணவர்களுடன் பேச அனுமதித்த அரசு: மாற்று கருத்துகள் வரவேற்கப்படுமா?
- செபாஸ்டியன் உஷர்
- பிபிசி அரபு விவகாரங்கள் ஆசிரியர்

பட மூலாதாரம், RIYADH PHILOSOPHY CONFERENCE
சவுதி அரேபியாவில் இத்தகைய மாநாடு நடப்பது இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது.
பொதுச் சிந்தனைக்கு மாறானது என கருதப்படும் கருத்துக்களை கூறுபவர்களை சமீப காலமாக சிறையில் அடைக்கும் நாடான சவுதி அரேபியாவில், விமர்சன சிந்தனையை வளர்க்கும் விதமாக, முக்கியமான சர்வதேச தத்துவ மாநாடு நடைபெற்றது.
ரியாத் நகரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்ட உயர்மதிப்பைக் கொண்ட கல்வியாளர்களில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தத்துவ நிபுணர் மைக்கேல் சாண்டெலும் ஒருவர்.
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசியரான மைக்கேல் சாண்டெல், தான் இந்த மாநாட்டில் விரிவுரையாற்ற விரும்பவில்லை எனவும், அதற்கு பதிலாக சவுதியின் பெண்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருடன் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபடுவதாகவும், மாநாடு ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கிங் பஹத் தேசிய நூலகத்தில் நடைபெற்ற அவருடைய அமர்வு யூடியூபில் நேரலை செய்யப்பட்டது. இந்த அமர்வின்போது, விமர்சன சிந்தனை மற்றும் தார்மீக ரீதியிலான தத்துவம் குறித்து சவுதியைச் சேர்ந்த நான்கு மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
மதம், அரசியல், சமூக சூழல் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்கும் பாரம்பரியம் குறைவாக உள்ள ஒரு நாட்டில், இந்நிகழ்வு, அசாதாரணமான, அழிக்கும் நிகழ்வாகவே பார்க்கப்படும்.
பட மூலாதாரம், RIYADH PHILOSOPHY CONFERENCE
கொரோனா வைரஸை அரசு கையாண்ட விதம் குறித்து மைக்கேல் சாண்டெல், விவாதத்தை எழுப்பினார். பின்னர், கொலை செய்த தன் உறவினரை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது அவரை பாதுகாக்க வேண்டுமா என, தார்மீக ரீதியிலான கேள்வியை எழுப்பினார்.
அப்போது பேசிய மாணவி ஒருவர், யாரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல எனவும், அது அந்த அரங்கத்திலிருக்கும் தன் தந்தையாக இருந்தாலும், அவரை காவல்துறையிடம் ஒப்படைப்பேன் எனவும் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த சவுதி மாணவர்களும், கல்வியாளர்களும் கரவொலி எழுப்பினர்.
பின்னர், சாண்டெல், தன் தந்தை கொலைகாரர் என அறிந்து குழப்ப நிலையில் இருந்த அரசர் குறித்த, பண்டைய சீன கதை ஒன்றைக் கூறினார். சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இல்லை என, அதிகாரப்பூர்வ மறுப்புகள் இருந்தபோதிலும், உலகத்தின் கருத்திற்கு முன்னால் அவர் குற்றம்சாட்டப்பட்ட ஒரு நாட்டில் இக்கதை ஏற்படுத்தும் அதிர்வில் தவறில்லை.
சமூக ஊடகங்களில் மதங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, சுதந்திரமான சிந்தனை கொண்ட சவுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மத நம்பிக்கைகளை எதிர்த்ததாக, சமீபத்தில் ஏமனைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இளவரசரின் நடைமுறை ஆட்சியின் கீழ், இஸ்லாமிய மத போதகர்கள் முதல், சீர்திருத்தத்தை ஆதரிக்கும் லூஜைன் ஹல் ஹத்லூல் போன்ற சவுதி பெண்கள் வரை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தத்துவம் குறித்து முறையாக பயிலாத இந்த மாணவர்களின் ஆர்வத்தைக் கண்டு தான் ஈர்க்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார் மைக்கேல் சாண்டெல். நெறிமுறை கேள்வி குறித்த விவாதத்துக்கான ஆர்வத்தால் தான் ஆச்சர்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை மாணவர்களே உறுதி செய்தனர். இந்த அமர்வு, தனக்கு "முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்", தான் அறியாத பல விஷயங்கள் குறித்துத் தன் கண்களை திறந்துவிட்டுள்ளதாகவும் மாணவி ஒருவர் தெரிவித்தார். "விமர்சன சிந்தனை மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியம்" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Reuters
கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் புகைப்படத்துடன் ஒருவர் - கோப்புப்படம்
பாடத்திட்டத்தில் விமர்சன ரீதியிலான சிந்தனை மற்றும் தத்துவப் பாடங்களை சேர்ப்பது குறித்த முன் தயாரிப்புகள் நடைபெற்று வருவதாக, சவுதி அரேபியாவின் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்பின், அவர் அத்துறையிலிருந்து மாற்றப்பட்டு, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகத் தெரிகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அரேபிய சிந்தனையாளர்கள் தத்துவத்தில் முன்னிலை வகித்தனர். மேலும், பண்டைய கிரேக்கத் தத்துவங்களை அரேபிய மொழியில் மொழிப்பெயர்த்து பாதுகாத்தனர்.
ஆனால், சவுதி அரேபியாவில் பாரம்பரியமாக அறிவு புகட்டப்படும் விதத்திலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது. இங்கு, செல்வாக்குமிக்க பழமைவாத இஸ்லாமிய மதகுருக்களின்படி அறிவு என்பது குரான் மற்றும் மற்ற புனித நூல்களை மனப்பாடம் செய்தல்தான் என வரையறுக்கப்படுகிறது. எனவே, மக்களையும் கல்வியாளர்களையும் இதுகுறித்து விழிப்படையச் செய்வதே அரசுக்குப் புரட்சிகரமானதாக இருக்கும்.
சவுதி கலாச்சார அமைச்சகம் கூறுகையில், "புதுமைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், வளமான சூழலை உருவாக்கும் விதத்திலான மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளது.
இந்த தத்துவ மாநாடு மற்றும் அதில் தன்னுடைய பங்கெடுப்பு, பரிச்சார்த்த முயற்சியிலானது என மைக்கேல் சாண்டெல் தெரிவித்தார்.
"நாங்கள் விவாதித்த நெறிமுறை குழப்பங்கள் குறித்த விவாதத்தை பார்வையாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றாலே, முதல்படியாக இதனை நான் வெற்றி என கூறுவேன். இந்த அமைப்பு என்ன அனுமதிக்கும் என்பதையும் நிச்சயமாகப் பார்க்க வேண்டும்." என கூறினார்.
பிற செய்திகள்:
- ஒமிக்ரான்: தடுப்பூசிகள் வேலை செய்யவில்லை எனில் பூஸ்டர்கள் மட்டும் எப்படி பலன் தரும்?
- ‘புஷ்பா’: “கேள்விப்படாத ஆண்கள் சங்கத்திற்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்?”- பாடலாசிரியர் விவேகா
- 8ஆம் வகுப்பு மாணவியை 4ஆவது திருமணம் செய்த நபர்: கருவுற்ற சிறுமி மீட்கப்பட்டது எப்படி?
- இந்தியாவால் இலங்கையில் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா?
- மூன்றாம் அலையை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறது இந்தியா?
- காஷ்மீர் காவல்துறை வாகனம் மீது தீவிரவாத தாக்குதல், இருவர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்