தீவிரமாகும் உணவுப் பிரச்சினை: உலக வங்கி

உணவுக் கையிருப்பு குறைகிறது படத்தின் காப்புரிமை AP
Image caption உணவு உற்பத்தியும், கையிருப்பும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன

உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்வாகவும், ஸ்திரமற்ற நிலையிலும் தொடர்வது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு ஆபத்தாக அமையும் என்றும், ஹோர்ண் ஓஃப் ஆப்பிரிக்க என்று அழைக்கப்படும், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளில் காணப்படும் பஞ்சம் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் இது மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் உலக வங்கி கூறுகிறது.

சராசரி உணவு விலையானது கடந்த பெப்ரவரியில் மிகவும் கடுமையாக அதிகரித்திருந்ததை விட சிறிதளவு குறைவாகவே இப்போது இருக்கின்ற போதிலும், ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததை விட மூன்றில் ஒரு மடங்கு அதிகமாக அது இருக்கின்றது என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சோளத்தின் விலை 84 வீதத்தாலும், கோதுமையின் விலை 55 வீதத்தாலும் அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கியின் அந்த அறிக்கை கூறுகிறது.

உலக உணவுக் கையிருப்பு மிகவும் மோசமான அளவுக்கு குறைந்துள்ளது என்று கூறும் உலக வங்கி, இது ஸ்திரமற்ற தன்மையையும், விலைத் தளம்பலையும் ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்த அறிக்கையை தயாரித்தவர்களின் தலைமை ஆய்வாளர் ஜோர்ஜ் குஸ்டா. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளளான உகண்டா, சோமாலியா, ருவண்டா ஆகிய நாடுகளில் சோளனின் விலை 100 வீதத்தால் அதிகரித்திருப்பதாக அவர் கூறுகிறார். அத்துடன் உலக உணவு கையிருப்பு அச்சத்தைத்தரும் அளவுக்கு குறைந்து போவதாகவும் அவர் எச்சரிக்கிறார்.

வடக்கு கென்யாவில் ''ஃபார்ம் ஆப்பிரிக்கா'' என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக பணியாற்றுகின்ற விவசாயப் பொருளாதார நிபுணர் ஜோர்ஜ் முக்கத், ''விவசாயத்துறையில் மேலும் முதலீடு செய்யப்பட்டால் மாத்திரமே உணவு நிலைமைகள் சீரடையும்'' என்று கூறுகிறார்.