பிடிபட்டதாக கூறப்பட்ட கடாஃபி மகன் பிபிசிக்கு பேட்டி

லிபியாவில் கர்ணல் கடாஃபியின் மகனும் கடாஃபிக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை ஏற்கும் நிலையில் இருந்தவரும் ஆன சயீஃப் அல் இஸ்லாம் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், திங்கள் இரவு அவர் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்ட நவடிக்ககை அதிகாரியான லூயிஸ் மொரேனோ ஒகெம்போவும்கூட கிளர்ச்சிப் படைகள் சயீஃப் இஸ்லாமைக் கைதுசெய்துவிட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திங்களன்று கூறியிருந்தார்.

விடுதிக்கு வந்தார்

ஆனால் திரிபோலியில் செய்தியாளர்கள் பயன்படுத்தும் விடுதி ஒன்றிற்கு வந்து நம்பிக்க கொப்பளிக்க பிபிசியிடம் பேசிய சயீஃப் அல் இஸ்லாம், நகருக்குள் முன்னேறிவந்த கிளர்ச்சிப் படைகளை தற்போது தாங்கள் திருப்பித் தாக்குவதாகக் கூறினார்.

"அவர்களை வெளியே போக முடியாமல் வலையில் சிக்க வைத்து தற்போது அவர்கள் முதுகெலும்பை முறித்து விட்டோம்." என்று அவர் தெரிவித்தார்.

கர்ணல் கடாஃபியும் திரிபோலிக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிடிபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட கடாஃபியின் இன்னொரு மகனான முகம்மதும் தப்பிச் சென்று விட்டதாக இப்போது தெரிவிக்கப்படுகிறது.

சண்டைகள் நீடிக்கின்றன

இதனிடையே திரிபோலி நகரில் கடாஃபியின் தலைமையகம் அமைந்துள்ள பாப் அல் அஸீஸியாவிற்கு அருகில் பல இடங்களில் சண்டைகள் நடந்துவருகின்றன.

இப்பகுதியில் ரொக்கெட் வீச்சின் நெருப்பும் புகையும் கிளம்புவதை காணக்கூடியதாக உள்ளது.

நகரின் மற்ற பகுதிகள், சென்ற வாரக் கடைசியில் இங்கு நுழைந்த கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தலைநகரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

கடாஃபியின் படையினர் மிஸ்ராதா நகருக்குள் மூன்று ஸ்கட் ஏவுகணைகளை வீசியுள்ளதாக நேட்டோ சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.