ரோம்: ஃபீலத்தீனோ சுதந்திரப் பிரகடனம்

  • 3 செப்டம்பர் 2011
ஃபீலத்தீனோ நகர் படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஃபீலத்தீனோ நகர்

ரோமிலிருந்து கிழக்காக சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைப் பிராந்திய நகரம் ஃபீலத்தீனோ.

இந்த வாரம் வரை நம்மில் பலர் இந்த நகரின் பெயரை கேள்விபட்டுக்கூட இருக்கமாட்டார்கள்.

வெறும் 550 பேர் மட்டுமே வாழ்ந்துவரும் இந்த சமஸ்தானத்தை, அருகிலுள்ள ட்ரேவி என்ற நகருடன் இணைக்க வேண்டுமென உள்ளூர் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் ரோம் அரசாங்கத்தின் புதிய ஒழுங்குவிதிகள் வற்புறுத்துகின்றன.

இது கனவிலும் சாத்தியப்படாது என்று ஃபீலத்தீனோ சமஸ்தானத்தின் மேயர் லூக்கா செல்லாரி முழங்குகிறார்.

யூரோவைப் பயன்படுத்தும் நாடுகள் எதி்ர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இவரது பதவிக்கும் ஆப்பு விழும் போல் தெரிகின்றது.

இதனாலேயே இவர் தீர்க்கமான முடிவொன்றுக்கு இப்போது வந்திருக்கின்றார்.

புதிய ரூபாய் நோட்டு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption புதிய ரூபாய் நோட்டுக்களுடன் மேயர் லூக்கா செல்லாரி

தமது சமஸ்தானத்தை தனி இராச்சியமாக சுதந்திரப்பிரகடனம் செய்து கொண்டுள்ள இவர், தமக்கென்று தனியான நாணயத் தாளையும் அச்சிட்டுவிட்டார்.

மேயரின் தலை பொறிக்கப்பட்டுள்ள ஃபீயரித்தோ என்ற இந்த புதிய நாணயத் தாள்கள் ஏற்கனவே உள்ளூர் சந்தைகளில் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

இந்த நாணயத்தாள்களை நினைவுச் சின்னமாக வாங்கி வைத்திருக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளால் வீதிகளும் இப்போது நிரம்பி வழிகின்றன.

தமது சமஸ்தானம் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டமை தொடர்பில் பெரும் உற்சாக வரவேற்பு காணப்படுவதாக மேயர் லூக்கா செல்லாரி கூறுகிறார்.

இந்த மலைப் பிரதேசத்து நகரில் வசிக்கும் 500 பேருக்கு மட்டுமல்ல, இத்தாலியின் பல திக்குகளிலிருந்தும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடத்திலும் ஒரு உன்னத களிப்பு தெரிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாளுக்கு நாள் ஃபீலத்தீனோவில் ஆர்வ மிகுதியால் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்களை காலி செய்துவிட்டு அந்த நிர்வாகங்களை அருகிலுள்ள பெரிய நகரங்களுடன் இணைத்து, செலவைக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் கூட்டணி அரசு முயற்சிக்கின்றது.

ஆனால் அரசு இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும், இல்லாவிட்டால் தமக்கும் வேறு மார்க்கமில்லை என்ற கோசங்கள் இத்தாலி முழுவதிலுமுள்ள மற்றும் பல சிறிய சிறிய நகரங்களிலிருந்து வந்துகொண்டு இருக்கின்றன.

மறு புறத்தில் இங்கு ஃபீலத்தீனோ தனது புதிய இலட்சனையுடனும் இணையதளத்துடனும் ஒரு சர்வதேச அந்தஸ்த்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

உலகெங்கிலும் செய்தி பரவி, ஊடகங்களில் ஃபீலத்தீனோ இன்று முக்கிய இடம்பிடித்துள்ளது. ரஷ்யாவிலும் தொலைக்காட்சிகள் ஃபீலத்தீனோ பற்றி ஆரவாரித்துக் கொண்டிருக்கின்றன.

எண்ணற்ற சமஸ்தானங்களையும் நிர்வாக அலகுகளையும் கொண்டு ஒரு காலத்தில் உருவானது தான் இத்தாலி.

இன்று குட்டி நிலத் துண்டன் சான் மாரினோ குடியரசினால் தன்னந்தனியாக தனித்து நிற்க முடிகின்றதென்றால் ஃபீலத்தீனோவால் மட்டும் ஏன் முடியாது என்பது தான் மேயர் லூக்கா செல்லாரியின் வாதம்.