கடாஃபி மரணம்: "விசாரணை வேண்டும்"

  • 21 அக்டோபர் 2011
பிடிக்கப்பட்ட நிலையில் கடாஃபி

கர்ணல் கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடாஃபி பிடிக்கப்பட்ட சமயத்தில் உயிரோடு இருந்துள்ளார் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று காட்டும் கைத்தொலைபேசி வீடியோ படங்கள் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

கர்ணல் கடாபியை தண்டனை நிறைவேற்றும் பாணியில் கொல்லவில்லை என லிபியாவின் இடைக்கால அரசாங்கம் கூறுகிறது.

தமது படைகளுக்கும் கடாஃபி விசுவாசப் படைகளுக்கும் இடையில் சர்த் நகரத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் கடாஃபி தலையில் குண்டடி பட்டிருந்தது என இடைக்கால அரசு கூறுகிறது.

சடலங்கள்

மிசுராதா நகரத்தில் குளிரூட்டப்பட்ட பெரிய அறையொன்றில் கடாஃபியின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

உடல் அடக்கம் பற்றிய திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை.

கர்ணல் கடாஃபியின் மகன்மாரில் ஒருவரான முதஸ்ஸிம்மின் சடலமும் குளிர் அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கழுத்திலும் மார்பிலும் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் முதஸ்ஸிம்மின் உடலில் காணப்படுகின்றன.

கர்ணல் கடாஃபியின் வாரிசாக - அடுத்த ஆட்சியாளராக உருவெடுக்கலாம் என்று பரவலாக கருதப்பட்ட இன்னொரு மகனான சயிஃப் அல் இஸ்லாம், சர்த் நகரை கிளர்ச்சிப் படைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

காயப்பட்டிருந்த நிலையில் சயீஃப் கிளர்ச்சிப்படையினரால் பிடிக்கப்பட்டுவிட்டதாக இடைக்கால நிர்வாகத்தின் சில உறுப்பினர்கள் கூறுகின்ற போதிலும், அந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.