இராக்கில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் பலி

படத்தின் காப்புரிமை AP
Image caption தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனத்தை சோதனையிடும் அதிகாரிகள்

இராக்கியத் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் ஷியா மற்றும் சுன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில், 14 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்று இராக்கின் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுபேற்கவில்லை. இராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய ஓரிரு தினங்களில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஷியா சுன்னி மோதல்?

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுன்னிப் பிரிவைச் சேர்ந்த துணை அதிபர் தாரிக் அல் ஹஷ்மி

அந்நாட்டின் மிக மூத்த சுன்னி அரபு அரசியல்வாதியும், நாட்டின் துணை அதிபருமான தாரிக் அல் ஹஷ்மி அவர்களை கைது செய்ய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஷியாப் பிரிவைச் சேர்ந்த பிரதமர் நூரி அல் மலிக்கி, அவரை கைது செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.

இராக்கில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய ஒற்றுமை அரசாங்கம் தமக்குள் ஏற்பட்டுள்ள விரிசல்களை எதிர்கொண்டுவரும் நிலையிலும், இனமோதல்கள் அதிகரிக்கக் கூடும் என்று அச்சங்கள் எழுந்துள்ள நிலையிலும்,இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பார்க்கும் போது, சுன்னி இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அல் கயீதா தீவிரவாத அமைப்புக்கே இப்படையான தாக்குதலை நடத்தும் வல்லமை உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஜன நெரிசல் மிகுந்த காலை நேரத்தில், பலர் வேலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption ஷியாப் பிரிவைச் சேர்ந்த இராகியப் பிரதமர் நூரி அல் மலிக்கி

எனினும் இந்தத் தாக்குதல் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து நடத்தப்படவில்லை என்று, பாதுகாப்பு படைகளின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் காசிம் அத்தா தெரிவித்துள்ளார்.

சிறார் பாடசாலைகள், தினக்கூலிகள் மற்றும் ஊழல் தடுப்பு அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்தே தாக்குதல் இடம்பெற்றது எனவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே இராக்கின் ஒரு மிகப்பெரிய சுன்னி பழங்குடி இனத்தலைவரான அலி ஹடேம் சுலைமான், நாட்டின் பிரதமர் நூரி அல் மலிக்கியை சதாம் உசேனுடன் ஒப்பிட்டு அவர் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.