'தயாரிப்புமுறையை' மாற்றும் கோலா நிறுவனங்கள்

அமெரிக்க சந்தையில் 90 வீதமான குடிபானங்களை கொக்ககோலா, பெப்சி நிறுவனங்களே தயாரிக்கின்றன
Image caption அமெரிக்க சந்தையில் 90 வீதமான குடிபானங்களை கொக்ககோலா, பெப்சி நிறுவனங்களே தயாரிக்கின்றன

பொதுவாக, நாம் அன்றாடம் சுவைத்து பருகும் பல குடிபானங்களிலும் திண்பண்டங்களிலும் காணப்படும் ஒருவகை நிறக்கலவைப் பதார்த்தம் தான் 4மீ எனப்படும் 4மெத்யில்இமிடாசோல் என்ற இராசயனப் பொருள்.

இது உடலில் சேர்வது புற்றுநோயைக் கொண்டுவரலாம் என்ற அச்சமிருப்பதால் குடிபானங்களிலும் தின்பண்டங்களிலும் அந்தக் கலவை இருப்பதற்கான எச்சரிக்கை பொறிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்துள்ளதாலேயே அவற்றின் தயாரிப்பில் உள்ள உட்சேர்க்கைப் பதார்த்தங்களில் மாற்றம் கொண்டுவர நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

எலிகளில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய்க்கும் இந்த இரசாயனப் பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் பொதுவாக கார்சினோஜன் பொருட்கள், அதாவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என சில இரசாயனப் பதார்த்தங்களை பட்டியல் படுத்தியுள்ள அமெரிக்காவின் கலிபோனிய அரசு, அந்தப்பட்டியலில் 4மெத்யில்இமிடாசோல் ஐயும் சேர்த்துள்ளது. இதனால் இந்தப் பொருட்கள் காணப்படும் குடிபானங்கள் குறிப்பாக கொக்ககோலா மற்றும் பெப்சி போன்ற பானங்களும் இந்த புற்றுநோய் எச்சரிக்கை அறிவித்தலை தாங்கிவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவித்தலை 'விஞ்ஞான ரீதியில் உறுதிசெய்யப்படாதது' என்று சுட்டிக்காட்டியிருக்கின்ற கொக்ககோலா நிறுவனம், அப்படியான எச்சரிக்கையை தாங்கிவருவதை தவிர்ப்பதற்காக அவற்றின் தயாரிப்புமுறையை மாற்றியமைக்குமாறு அதன் தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டுள்ள எலிகளில் புற்றுநோயை ஏற்படுத்தியுள்ள இந்த இராசயனப் பொருளின் அளவைப் பார்க்கும்போது, மனிதரில் அதனை பரிசோதனை செய்ய ஒருவர் 1000 கான்களுக்கும் அதிகமாக கொக்ககோலா பருகியிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.

இப்போதைக்கு கலிபோர்னியாவில் தமது தயாரிப்புகளில் மாற்றம் கொண்டுவந்தி்ருப்பதாகக் கூறியிருக்கும் கொக்ககோலா மற்றும் பெப்சிகோ நிறுவனங்கள், அவற்றின் மற்ற ஆலைகளிலும் தயாரிப்புமுறையில் மாற்றம் வரும் என்று அறிவித்துள்ளன.

இதேவேளை, புதிய மாற்றத்தால் தமது தயாரிப்புகளின் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.