பட்மன் பட திரையரங்கில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

முகமூடி அணிந்துவந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார் படத்தின் காப்புரிமை AP
Image caption முகமூடி அணிந்துவந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்

அமெரிக்காவின் டென்வர் நகரில், பட்மன் திரைப்பட முதல்நாள் காட்சியின்போது நடந்துள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

50 பேர்வரையில் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அரோரா நகர சினிமா திரையரங்கில் நேற்று நள்ளிரவு வெளியான த டார்க் நைட் ரைஸஸ் திரைப்படத்தின் முதல்க் காட்சியின்போது, சுவாசக்காப்பு முகமூடியை அணிந்துவந்த நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தின்போது,ஆயுததாரி புகை குண்டையும் வீசியுள்ளதாகக் கூறும் காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் அம்பியூலன்ஸ் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பக்கத்து திரையறையிலிருந்து துப்பாக்கி ரவைகள் சுவரைப் பொத்துக்கொண்டு வந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

படிகள் ஊடாக மெதுவாக நடந்தவந்த நபர் ஒருவர் ஆங்காங்கே மக்களை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது.