பெண்ணுக்கு "முறையற்ற" மின் அஞ்சல்: அமெரிக்க தளபதி மீது விசாரணை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2012 - 12:42 ஜிஎம்டி
பெட்ரேயஸுடன் ஜெனரல் ஜான் அல்லென்

ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் சி ஐ ஏ தலைவராக ஆன பின்னர் ஆப்கானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியாக வந்தவர் ஜெனரல் ஜான் அல்லென்

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் ஜான் அல்லென் மீது அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் பெட்ரேயஸ் அண்மையில் விலக காரணமான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஜில் கெல்லி பெண்ணுடன் முறையற்ற தொடர்பாடல்களை ஜெனரல் ஜான் அல்லென் செய்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார்.

தான் தவறேதும் செய்யவில்லை என்று ஜெனரல் அல்லென் கூறுகிறார்.

தன்னை நோகடிக்கும் விதமான மொட்டைக் கடிதங்கள் மின் அஞ்சலில் வருவதாக புளோரிடாவில் அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில் தன்னார்வலராக வேலைபார்த்துவரும் ஜில் கெல்லி எஃப் பி ஐ யிடம் முறைப்பாடு செய்தார்.

இந்த மின் அஞ்சல்கள் யாரிடம் இருந்து வருகின்றன என்று எஃப் பி ஐ ஆராய்ந்தபோது அவை பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதைப் புத்தகத்தை எழுதிய போலா பிராட்வெல் என்பவரிடம் இருந்துவருவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

போலா பிராட்வெல்லின் மற்ற மின் அஞ்சல்களை ஆராய்ந்தபோதுதான் அவருக்கும் ஜெனரல் டேவிட் பெட்ரேயஸுக்கும் இடையில் தொடர்பு இருந்தது வெளியே வந்தது.

உறவு இருந்ததை ஒப்புக்கொண்டு சி ஐ ஏ தலைவர் பதவியிலிருந்து ஜெனரல் பெட்ரேயஸ் விலகியிருந்தார்.

ஜெனரல் அல்லென் ஜில் கெல்லிக்கு அனுப்பிய மின் அஞ்சல்கள் பாலியல் விவகாரம் சம்பந்தப்பட்டவையா அல்லது வெளியே தெரிவிக்கக்கூடாத விவகாரங்களா என்று இன்னும் தெரியவரவில்லை.

இதனிடையே போலா பிராட்வெல்லின் வீட்டை எஃப் பி ஐ அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

விசாரணைகள் நடந்தாலும் ஜெனரல் அல்லென் ஆப்கானில் தளபதியாக நீடிப்பார் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அறிவித்துள்ளார்.

ஆனால் ஐரோப்பாவில் நேட்டோ கூட்டு படைகளின் அதியுயர் கட்டளைத் தளபதியாக ஜான் அல்லென் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்த முடிவுதான் தற்போது ஒத்திப்போடப்பட்டுள்ளது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.