'நவ்றூ தீவு முகாமில் நிலைமை கொடூரமாக இருக்கிறது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 நவம்பர், 2012 - 15:11 ஜிஎம்டி
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தூதுக்குழுவினர் 3 நாட்கள் நவ்றூ தீவு முகாமில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தூதுக்குழுவினர் 3 நாட்கள் நவ்றூ தீவு முகாமில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

நவ்றூத் தீவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமில் நிலைமைகள் மிக 'கொடூரமாகவும் தரக்குறைவாகவும்' காணப்படுவதாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்பெறும் நோக்குடன் படகுகள் மூலம் வந்தவர்களில் 386 ஆண்கள், அவர்களது தஞ்சக்கோரிக்கை பரிசீலனை முடியும் வரை இந்த நவ்றூ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

'இவர்கள் தங்கியுள்ள கூடாரங்கள் ஆட்களால் நிரம்பிவழிகின்றன. வெப்பத்திற்கும் மழைக்கும் தாக்கப்பிடிக்காத இந்தக் கூடாரங்களில் எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கத்துக்கான சுதந்திரமே இல்லை. எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு தடுத்துவைக்கப்பட போகிறோம் என்பது தெரியாமலேயே அவர்கள் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்' என்று அம்னஸ்டி கூறியுள்ளது.

இந்த முகாம்களில் இருப்பவர்களின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலித்து முடிக்கும் வரை, அவர்கள் 5 ஆண்டுகள் வரையாவது அந்த முகாம்களிலேயே காத்திருக்க வேண்டும் என்று ஆளும் தொழிற்கட்சியும் எதிர்கட்சியும் கூறுகின்றன.

'நவ்றுத் தீவில் ஒவ்வொரு கூடாரத்திலும் 16 பேர் அல்லது 5 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அருகருகே மிக நெருக்கமான படுக்கைகளும் உடுதுணிகளை வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் கூடைகளும் வழங்கப்பட்டுள்ளன. 40 டிகிரி வரையான வெப்பத்துடன் காற்றிலும் அதிக ஈரலிப்புக் காணப்படுவதால் வெப்பம் கொளுத்துவதாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.

அம்னஸ்டி இண்டர்நேஷனல் தூதுக்குழு அங்கு சென்றிருந்தபோது, நிலைமை இன்னும் மோசமாக இருந்துள்ளது. முகாமின் ஒருபகுதியில் மழை வௌ்ளம் புகுந்து கூடாரங்களும் படுக்கைகளும் நனைந்து இருந்திருக்கின்றன.

'கிரிமினல்களுக்கு கொடுக்கின்ற கடுமையான தண்டனை போல் இது இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கிரிமினல்கள் இதனைவிட நல்லாத்தான் நடத்தப்படுகிறார்கள். ஒரு குற்றவாளிக்கு எவ்வளவு காலம் தான் சிறையில் இருக்கப்போகிறேன் என்பது தெரியும். இங்கு அது கூட எங்களுக்குத் தெரியாது' என்று நவ்றூ முகாமில் உள்ள ஒருவர் அம்னஸ்டி இண்டர்நேஷனலிடம் கூறியுள்ளார்.

தமது நிலைமையை முன்னிறுத்தி 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் 40 நாட்களுக்கு மேலாக உணவு உண்ண மறுத்துவருகிறார் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

'பசிபிக் சொலூஷன்'

அபாயகரமான படகுப் பயணங்கள் மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வருவோரை தடுக்கும் நோக்குடன் பசிபிக் சொலுஷன் கொள்கையை ஆஸ்திரேலியா மீண்டும் கையில் எடுத்துள்ளது.

அபாயகரமான படகுப் பயணங்கள் மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வருவோரை தடுக்கும் நோக்குடன் பசிபிக் சொலுஷன் கொள்கையை ஆஸ்திரேலியா மீண்டும் கையில் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய மற்றும் நவ்றூ அரசுகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் மீறப்பட்டுவருவதாக அம்னஸ்டி இண்டர்நேஷனலைச் சேர்ந்த டாக்டர் கிரஹாம் தோம் கூறுகிறார். இந்த முகாமுக்கு ஆட்களை மாற்றுவதை ஆஸ்திரேலியா உடனடியாக நிறுத்தி, அந்த முகாமையே முழுமையாக மூடிவிடவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அரச தரப்பு பேச்சாளர் ஒருவர், 'அம்னஸ்டி இந்தக் கருத்தை முன்வைத்திருப்பது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. இந்த நவ்றூ முகாமுக்கு முன்பிருந்தே குடியேறிகளை தடுத்துவைத்திருக்கின்ற வழக்கம் இருந்துவருகிறது' என்று அவர் பதில் கூறுகிறார்.

'தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படுகிறது. மருத்துவ வசதியும் இருக்கிறது. தேவையானால் உளவியல் ஆற்றுப்படுத்தும் வசதிகளும் உள்ளன' என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தஞ்சக்கோரிக்கை தொடர்பான விசாரணைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்று கேட்டபோது, 'ஆஸ்திரேலியா நவ்று அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றிவருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பரிசீலனைகள் தொடங்கும்' என்று ஆஸ்திரேலிய அரச பேச்சாளர் கூறினார்.

ஆஸ்திரேலிய அரசு, தனது நாட்டின் பெருநிலப் பரப்புக்கு வெளியே பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில தீவுகளில் முகாம்களை திறந்து அங்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுத்துவைத்து விசாரிக்கின்ற 'பசிபிக் சொலூஷன்' என்ற நடைமுறையை பல ஆண்டுகளாக கைக்கொண்டு வந்தது.

ஆனால் 2008-ம் ஆண்டில் அந்த கொள்கையை ரத்து செய்திருந்த நிலையில் இப்போது மீண்டும் அந்த முகாமைத் திறக்க கடந்த ஆகஸ்டில்ஆஸ்திரேலியா முடிவு செய்தது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பப்புவா நியூகினியில் உள்ள மானுஸ் தீவிலும் இன்னொரு முகாம் திறக்கப்பட்டுள்ளது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.