2020-இல் நிலாவுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 டிசம்பர், 2012 - 14:56 ஜிஎம்டி
குறைந்த செலவில் நிலாவுக்குச் செல்வது விண்வெளி ஆய்வுகளை பல நாடுகளிலும் ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

குறைந்த செலவில் நிலாவுக்குச் செல்வது விண்வெளி ஆய்வுகளை பல நாடுகளிலும் ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் முன்னாள் தலைமை பொறியியலாளர்களின் குழுவொன்று நிலாவுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் வர்த்தக முயற்சியை 2020-ம் ஆண்டுக்குள் முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

தமது பயணத்திட்டத்தின் மூலம் 1.4 பில்லியன் டொலர்கள் செலவில் இரண்டுபேர் நிலாவுக்கு செல்லமுடியும் என்று இந்த திட்டத்தை அறிவித்துள்ள கோல்டன் ஸ்பைக் நிறுவனம் கூறியுள்ளது.

விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டுவரும் தனியார் நிறுவனங்களில் ஒன்றான கோல்டன் ஸ்பைக், அமெரிக்காவில் கொலராடோவை தளமாகக் கொண்டு இயங்குகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள விண்வெளி ராக்கெட் மற்றும் கெப்ஸுயூல் தொழிநுட்பத்தைக் கொண்டு இந்த பயணத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ள கோல்டன் ஸ்பைக் கம்பனி, அரசு ஒழுங்குசெய்யும் பயணங்களை விட குறைந்த செலவில் அதனை சாத்தியப்படுத்தமுடியும் என்றும் கூறுகிறது.

வெறுமனே தனிப்பட்ட சுற்றுலா பயணங்கள் என்றளவில் மட்டும் இயங்காமல், நாடுகளின் மட்டத்தில் விஞ்ஞானத்துறையின் முன்னேற்றத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவதே தமது நோக்கம் என்று கோல்டன் ஸ்பைக் கம்பனியின் தலைவர் கெர்ரி க்ரிஃபின்ஸ் கூறினார்.

விண்வெளி ஆய்வுத் துறையில் அக்கறை செலுத்துகின்ற தென்னாபிரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கூட, தமது ஆய்வுகளுக்காக குறைந்த செலவில் நிலாவுக்கான பயணத்தை முன்னெடுப்பதற்கு தமது நிறுவனத்தின் திட்டம் உதவும் என்று கோல்டன் ஸ்பைக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அலன் ஸ்டெர்ன் கூறினார்.

1960-களில் நிலாவுக்கு பயணிக்கக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா தான் என்ற நிலையே இருந்தது.

அதற்கான செலவுதான் மற்ற எந்த நாட்டையும் அதுபற்றி சிந்திக்க இடமளிக்கவில்லை.

இன்று கோல்டன் ஸ்பைக் தனியார் நிறுவனம் முன்னெடுக்கின்ற திட்டம் சாதாரண நாடுகளையும் அந்தத்துறையில் நாட்டம் செலுத்த இடமளிக்கும் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.