"அல்ஜீரியாவில் பணயக் கைதிகள் நெருக்கடி நீடிக்கிறது"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஜனவரி, 2013 - 10:54 ஜிஎம்டி
எரிவாயுத் தொழிற்சாலை - செயற்கைக்கோளிலிருந்து

சம்பவம் நடந்துவரும் எரிவாயுத் தொழிற்சாலை - செயற்கைக்கோளிலிருந்து எடுத்த படம்

அல்ஜீரியாவில் சஹாரா பாலைவனம் பகுதியில் உள்ள ஒரு எரிவாயுத் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் டஜன் கணக்கானவர்களை பணயக் கைதியாக பிடித்துவைத்துள்ள நெருக்கடி இன்னும் நீடிக்கவே செய்கிறது என பிரிட்டன் கூறுகிறது.

பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு சிலரின் கதி என்ன என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.

வியாழனன்று இவர்களை விடுவிக்க அல்ஜீரியத் துருப்புகள் முயன்றபோது பணயக் கைதிகள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர்.

இனிமேலும் கெட்ட செய்திகள் வரலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்துள்ளார்.

பிடித்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்க நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று அல்ஜீரிய அதிகாரிகள் வியாழனன்றே அறிவித்திருந்தாலும், ஆயுததாரிகள் பணயக் கைதிகளை பிடித்துவைத்துள்ள அந்த தொழிற்சாலையைச் விசேடப் படையினர் சுற்றி வளைத்துள்ள முற்றுகை நீடிக்கிறது என அல்ஜீரிய அரசு வானொலி கூறுகிறது.

அல்ஜீரியாவில் பிடிபட்டுள்ள பணயக் கைதிகள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களோ, அந்தந்த நாடுகள் இந்தச் சம்பவம் தொடர்பிலும் பிடிபட்டுள்ளவர்களின் நிலை தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளன.

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபெ, தேர்தல் வெற்றிக்குப் பின் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்த நெருக்கடி காரணமாக ஒத்திப்போட்டுள்ளார்.

பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு அல்ஜீரியப் படைகள் மேற்கொண்ட முயற்சி வருந்தத்தக்கது என்று அவர் கூறினார்.

பணயக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அதிக முக்கியத்துவம் தந்து இந்த விவகாரத்தை அல்ஜீரியா கையாள வேண்டும் என்று நோர்வே அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டனில் பிரதமர் தலைமையில் இது சம்பந்தமாக அவசரக் கூட்டம் நடக்கிறது.

பிரதமர் கெமரன் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விவரம் அளிக்கவுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.