சீனாவில் பூகம்பம்; 150 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்

ஆகாயத்திலிருந்து பூகம்ப அழிவுகளைக் காட்டும் படம்
Image caption ஆகாயத்திலிருந்து பூகம்ப அழிவுகளைக் காட்டும் படம்

சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர்.

திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது.

மற்றபல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன.

மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.