வங்கதேச கட்டிட விபத்து: தொழிற்சாலையில் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

  • 26 ஏப்ரல் 2013
ஆர்ப்பாட்டத்தினரைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியிருந்தனர்.
Image caption ஆர்ப்பாட்டத்தினரைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியிருந்தனர்.

வங்கதேசத் தலைநகர் தாக்காவில் பின்னலாடைத் தொழிற்சாலைகள் இயங்கிவந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று கடந்த புதன்கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்நூறைத் தாண்டிவிட்ட நிலையில், அந்நாட்டின் ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்காவுக்கு உள்ளும் வெளியிலும் வாகனங்களைத் தாக்கியும் கட்டிடங்களுக்கு தீவைத்தும் இருந்தனர்.

கட்டிடம் விரிசல் விழுகிறது என்று புகார் கூறியும் ஊழியர்கள் தொடர்ந்து வேலைபாருங்கள் என்று மறுத்துரைத்த கட்டிட உரிமையாளர்கள் கைதுசெய்யபப்ட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

Image caption ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புகழ்பெற்ற பிரைமார்க், வால்மார்ட் போன்ற பெரும் ஆடைநிறுவனங்களுக்கு ஆடை தைக்கும் பெரும் தொழிற்சாலைகள், விபத்துக்குள்ளான இந்த ராணா பிளாஸாவில் இயங்கிவந்தன

நூற்றுக்கணக்கானோரின் கதி என்னானது இன்னும் தெரியவராத நிலையில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை தொடர்ந்து தோண்டிவருகின்றனர்.

இடிந்த கட்டிடத்தின் நான்காவது மாடிக்குள் சிக்கியிருந்தவர்களில் 41 பேர் வியாழக் கிழமை காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மேற்குலக சந்தைகளுக்காக ஆடைத் தைக்கும் பெருந்தொழிற்சாலைகள் இந்தக் கட்டிடத்தில் இயங்கிவந்துள்ளன.