நடுக்கடலில் படகு கவிழ்ந்தும் நீந்தியே நால்வர் உயிர் தப்பினர்

  • 26 ஏப்ரல் 2013
சகோதரி கேட்டுடன் டான் சூஸ்கி
Image caption சகோதரி கேட்டுடன் டான் சூஸ்கி

அந்த நால்வருக்கும் அது ஒரு மறக்க முடியாத மீன்பிடி கடல் பயணம்.

கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவான செண்ட் லூசியாவில் , மீன் வளமிக்க கடல்பகுதிகளைப் பார்க்க மீன்பிடிப் படகொன்றில் பயணம் செய்த அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இருவர் மற்றும் அவர்களைக் கூட்டிச் சென்ற உள்ளூர் மீனவர்கள் இருவர் ஆகியோர், அவர்கள் பயணம் செய்த படகு கடலில் மூழ்கத் தொடங்கிய பின்னர், அதிசயமாக உயிர் தப்பியிருக்கின்றனர்.

அமெரிக்கர் உடன்பிறப்புகளான டான் சூஸ்கி மற்றும் அவரது சகோதரி கேட் சூஸ்கி ஆகியோர், ஆழ்கடலில் மீன்வளம் அதிகம் இருக்கும் பகுதிகளைப் பார்க்க ஆசைப்பட்டு, ஒரு மீன்பிடி படகை வாடகைக்கு எடுத்து சென்றனர்.

அவர்கள் கரையிலிருந்து சுமார் 8 மைல் தூரத்தில் கடலுக்குள் இருந்தபோது, அந்தப் படகு மூழ்கத் தொடங்கியது.

மூழ்கிய படகிலிருந்து குதித்த இந்த அமெரிக்கப் பயணிகள் மற்றும் அவர்களைக் கூட்டிச்சென்ற மீன்வர்கள் இருவரும், முதலில் கடலில் ஒருவருக்கொருவர் அருகிலேயே இருக்க முயன்றனர்.

ஆனால் நேரம் ஆக ஆக, அவர்கள் கடற்கரைக்கு நீந்திச் சென்றுவிடலாம் என்று நினைத்து நீந்தத் தொடங்கினர்.

கடுமையான அலைகள், கடல் நீர் ஏற்றம் ஆகியவைகளுடன் போராடி அவர்கள் நீந்த முயன்றபோது, நால்வரும் தனித்தனியே பிரிந்துவிட்டனர்.

டானும் கேட்டும் நீந்திக்கொண்டிருந்தபோது, தங்களைக் காப்பாற்ற வந்த மீட்பு விமானங்கள் மேலே பறப்பதைப் பார்த்தாலும், விமானிகளால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

மூழ்கிவிடுவோமோ அல்லது சுறாக்களால் தாக்கப்படுவோமோ என்ற அச்சங்கள் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து நீந்திக்கொண்டேயிருந்தனர்.

ஒரு வழியாக அவர்கள் 14 மணிநேரங்கள் நீந்திய பின்னர் கடற்கரையை அடைந்த அவர்கள் களைப்பால் தள்ளாடியபடி அங்குமிங்கும் நடந்து திரிவதைக் கண்ட ஒரு உள்ளூர் விவசாயி அவர்களை ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்.

படகோட்டிகளின் கதை மேலும் அதிசயமானது.

அவர்கள் 23 மணிநேரம் நீந்திய பின்னர் மீட்கப்பட்டனர்.

செண்ட் லூசியாவின் சுற்றுலா அமைச்சர் இந்த ஒட்டு மொத்த சம்பவமே ஒரு தெய்வாதீனமான சம்பவம் என்று வர்ணித்துள்ளார்.