கூகுள் இணையத் தேடல்கள்: ஐரோப்பாவில் மாற்றம் வருகிறது

  • 26 ஏப்ரல் 2013
மற்ற நிறுவனங்களின் இணையத் தயாரிப்புகளை கூகுள் இருட்டடிப்புச் செய்வதாகக் குற்றச்சாட்டு
Image caption மற்ற நிறுவனங்களின் இணையத் சேவைகளை கூகுள் இருட்டடிப்புச் செய்வதாகக் குற்றச்சாட்டு

நாம் இணையதளத்தில் ஒருவிடயத்தை தேடும்போது கூகுள் பக்கத்தில் எமக்கு பதில்கள் காண்பிக்கப்படும் முறைமை தொடர்பில் ஐரோப்பாவுக்குள் மாற்றம் கொண்டுவர கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.

இணைய உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் சர்ச் எஞ்சின் எனப்படும் இணையத் தேடல்களுக்கான பக்கத்தில் நாம் ஒன்றைத் தேடும்போது, மற்ற சிறிய, போட்டி நிறுவனங்களை கூகுள் புறந்தள்ளிவிடுகிறது என்றும் அதனால் பாவனையாளர்கள் அந்த முடிவுகளை கண்டுகொள்ளாதவாறு செய்வது ஒருவகை இணையத் துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுக்கள் வந்த நிலையிலேயே, கூகுள் இந்த விட்டுக்கொடுப்புக்கு முன்வந்துள்ளது.

கூகுளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்ட உடன்பாடுகளையும் எந்தவகையில் கூகுளின் தேடல் முடிவுகள் அமைய வேண்டும் என்ற ஒரு விளக்கத்தையும் ஐரோப்பிய ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்போது கூகுள் ஒத்துக்கொண்டுள்ள உடன்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் அதுபற்றி தமது கருத்துக்களை வெளியிட ஒருமாத கால அவகாசமும் அந்த நிறுவனத்தின் போக்கை எதிர்ப்பவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமர்சகர்களின் கருத்துக்களைக் கொண்டே புதிய நடைமுறையை அப்படியே வைத்துக்கொள்ள முடியுமா அல்லது இன்னும் மாற்றங்கள் தேவையா என்பது தீர்மானிக்கப்படும்.

மூன்றாண்டு போராட்டம்

Image caption கூகுள் மேப்ஸ்

கூகுள் நிறுவனத்தின் வியாபார உத்திகள் தொடர்பில் மூன்றாண்டுகளாக நிலவிய பிரச்சனைக்கு முடிவுகொண்டுவரும் பொருட்டே கூகுள் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இணையதள தேடல்களின்போது கிடைக்கும் பதில்களை பாவனையாளர்களுக்கு முழுமையாகத் தெரியாமல் கூகுள் மறைத்துவிடுவதாக போட்டி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் குற்றஞ்சாட்டியது.

அதாவது, இணைய உலகில் குறைந்த அளவில் அறியப்பட்ட, தேடல்-பக்க இணைய நிறுவனங்களால் பிரபலபடுத்தப்படும் பொருட்களும் சேவைகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, கூகுள் சேவைகள் மட்டுமே காட்டப்படுவதாகத் தான் குற்றச்சாட்டு.

அதற்காக இனிமேல், கூகுள் நியூஸ், கூகுள் மேப்ஸ் மற்றும்பல கூகுளுக்குச் சொந்தமான பயண ஒழுங்குகள், சில்லறை வர்த்தகம் சம்பந்தப்பட்ட வி்டயங்களை கூகுள் லேபல்களுடனேயே காட்சிப்படுத்த கூகுள் முன்வந்திருக்கிறது.

அமெரிக்காவை விட, ஐரோப்பாவில் கூகுள் பெரிய அளவில் விட்டுக்கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க இணையக் கட்டுப்பாட்டாளர்கள், கடந்த ஜனவரியில் கூகுளிடம் சிறியளவிலான மாற்றங்களையே வலியுறுத்தியிருந்தார்கள்.

மைக்ரோசாஃப்ட், எக்ஷ்பீடியா, டிரிப் அட்வைஸர், நோக்கியா போன்ற கூகுளின் போட்டி இணைய நிறுவனங்கள், இப்போது கூகுள் ஒப்புக்கொண்டுள்ள முடிவுகளை ஆராயும்.

அதேவேளை, கூகுள் தனது சொந்த பொருட்களை வரிசைப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் கைகொள்ளும் கொள்கைகளை மற்ற இணைய தள நிறுவனங்களின் பொருட்களுக்கும் பிரயோகிப்பதை உறுதிசெய்வதே முக்கியமான விடயம் என்று Fairsearch என்ற நிறுவனம் கூறியுள்ளது.