ஆஸ்திரேலிய பிரதமராகும் கனவில் டைட்டானிக் பால்மர்

  • 26 ஏப்ரல் 2013
டைட்டானிக் கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ள பெரும் செல்வந்தர் க்ளைவ் பால்மர்
Image caption டைட்டானிக் கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ள பெரும் செல்வந்தர் க்ளைவ் பால்மர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான க்ளைவ் பால்மர், நாட்டின் பிரதமராகும் கனவோடு அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ளதாக அறிவித்த க்ளைவ் பால்மர், சுரங்கத் தொழிற்துறையைச் சேர்ந்த பெரும் பணமுதலை. அவர் அண்மைக் கால செய்திகளில் பெருமளவில் பேசப்பட்டு வந்திருக்கிறார்.

எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

1945-இல் கலைக்கப்பட்ட ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சிக்கு மீள உயிர்க்கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்குமாக பிரிந்துவிட்டதால் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது.

அந்தக் கட்சியிலுள்ள ஒரேயொரு வேட்பாளர் இப்போதைக்கு க்ளைவ் பால்மரே. அதேவேளை, மற்றவர்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய பெரும்புள்ளிகள் பலரும் தமது கட்சியில் இடம்பெறுவார்கள் என்று அவர் நம்புகிறார்.

'நாட்டின் தயாரிப்புத் தொழிற்துறையை முடமாக்கியுள்ள கரியமிலவாயு வரியை ஒழித்துக்கட்டுவது தான்' தனது முதல்வேலை என்று பால்மர் கூறிவருகிறார்.