இராக் : 'மீண்டும் வகுப்புவாத வன்செயல்களை நோக்கி'

  • 27 ஏப்ரல் 2013

இராக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடந்த வன்செயல்களில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டிருக்கிறது.

கோபம் என்பது அமைதியை தோற்கடித்துவிடக் கூடாது என்று இராக்குக்கான ஐநா தூதுவரான மார்ட்டின் கொப்லர் கேட்டிருக்கிறார்.

முன்னதாக நேற்று தலைநகர் பாக்தாதில் சுனிக்களின் மசூதிகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில், குறைந்தபட்சம் 5 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சுன்னி இன ஆயுததாரிகளால் வடக்கு நகரான சுலைமான்பெக் கைப்பற்றப்பட்ட பின்னர் அந்த நகருக்குள், அரசாங்கப் படைகள் நுழைந்திருக்கின்றன.

பழங்குடியின தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாடு ஒன்றை அடுத்து அங்கிருந்து அந்த ஆயுததாரிகள் தற்போது பின்வாங்கிச் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மற்றுமொரு வடக்கு நகரான ஹவிஜாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்ட முகாம் ஒன்றினுள் இராணுவம் நுழைந்ததில் செவ்வாயன்று 50 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இராக்கின் பல நகரங்களில் மோதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

பரவலான வன்செயல்கள்

2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த கிளர்ச்சிக்காலத்தை விட இந்த வன்செயல்கள் குறைவாக இருக்கின்ற போதிலும், அமெரிக்கப் படைகள் 2011இல் அங்கிருந்து வெளியேறிய பின்னர் இவை பரவலாக நடக்கின்றன.

ஷியா மதப்பிரிவைச் சேர்ந்த பிரதமர் நூரி அல்மலிக்கி பதவி விலக வேண்டும் என்று ஹவிஜா ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகிறார்கள்.

இராக் ஒரு வகுப்புவாத வன்செயல்களுக்கான களமாக மாறிவருவதாக பிரதமர் எச்சரித்திருக்கிறார்.

இதே கருத்தையே பிரதிபலித்திருக்கின்ற இராக்குகான ஐநா தூதுவரும், இராக் இப்போது எந்தப் பாதையில் செல்வது என்பதை தீர்மானிக்கும் ஒரு புள்ளியில் நிற்பதாகவும், இந்த நிலையில் அனைத்து தரப்பினரும், கோபத்தால், அமைதி தோற்கடிக்கப்படுவதற்கு அனுமதித்து விடக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இராணுவத்தை வெளியேற எச்சரிக்கை

தமது சமூகம் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்ற சுன்னி இன முஸ்லிம்கள், ரமாடி, ஃபாலுஜா போன்ற நகரங்களிலும், அன்வர் மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கில் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

ரமாடியில் இராணுவ உடையில் தோன்றிய ஒரு மதகுரு, இராக்கிய படைகள் 24 மணிநேரத்தில் அங்கிருந்து வெளியேறாவிட்டால், அங்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தனக்கே தெரியாது என்று எச்சரித்திருக்கிறார்.

அதேவேளை பாக்தாதில் சுன்னிக்களின் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டு வெடித்ததில் 4 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையிலேயே இராக் மீண்டும் சுன்னி மற்றும் ஷியாக்கள் இடையேயான வகுப்புவாத வன்செயல்களின் மையமாகிவிடுமோ என்ற அச்சம் பலர் மனதிலும் எழுந்திருக்கிறது.