வங்கதேசம்: இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் பிடிபட்டார்

  • 28 ஏப்ரல் 2013
நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் சடலங்களோடு உயிரோடு புதையுண்டுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் போராடிவருகின்றனர்
Image caption நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் சடலங்களோடு உயிரோடு புதையுண்டுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் போராடிவருகின்றனர்

வங்கதேசத்தில் கடந்த புதனன்று இடிந்துவிழுந்த தொழிற்சாலைக் கட்டிடத்தின் உரிமையாளர் மொஹமட் சொஹெல் ராணா கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ராணா பிளாஸா இடிந்து விழுந்த சம்பவம் முதல் தலைமறைவாகியிருந்த அதன் உரிமையாளர் மொஹமட் சொஹெல் ராணா, இந்திய எல்லைக்கு அருகே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் உயிருடன் உள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9 பேரை இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்டெடுக்க பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த விபத்தில் சிக்கி 360க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் நூற்றுக்கணக்கானவர்களில் எவரையாவது உயிருடன் மீட்கமுடியுமா என்று மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இடிபாடுகளில் சடலங்களோடு புதைந்துகிடந்த நிலையில் சிலர் உயிருடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியொன்றில் இடிந்துவிழுந்த இந்த எட்டுமாடி தொழிற்சாலைக் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குறைந்தது இரண்டாயிரத்து நானூறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.