கார் குண்டுத்தாக்குதலில் இருந்து சிரியாவின் பிரதமர் உயிர் தப்பினார்

  • 29 ஏப்ரல் 2013

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிரதமர் வாஹில் அல் ஹல்கி அவர்களின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் இருந்து அவர் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹல்கி அவர்களின் குறுகிய செவ்வி ஒன்றை வெளியிட்ட அரசாங்க தொலைக்காட்சி, அந்தச் செவ்வி அந்தத் தாக்குதலுக்கு பின்னர் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அவர் உறுதியாக இருப்பதாக தென்பட்டாலும், அவர் அப்போதுதான் கலந்துகொண்ட பொருளாதாரம் குறித்த கூட்டம் ஒன்று பற்றி பேசியபோது அவர் சற்று ஆடிப்போனவராக காணப்பட்டார்.

சற்று முன்னதாக அந்த தாக்குதலில் அவர் எந்தவிதமான பாதிப்பும் இன்றி தப்பியுள்ளதாக தொலைக்காட்சி கூறியது, அவரது மெய்ப்பாதுகாவலர் அதில் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன.

அந்த தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.