'இமாலய மோதல்' -- ஐரோப்பிய மலையேறிகளுக்கும் ஷெர்பாக்களுக்கும் இடையே

  • 29 ஏப்ரல் 2013
Image caption மலையேறிகளுக்கு, ஷெர்பாக்களுக்குமிடையே மோதல்

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற மூன்று மலையேறும் வீரர்களும், அவர்களை வழி நடத்திச் சென்ற நேபாளி ஷெர்பாக்களும் மோதிக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இமயமலை உச்சிச் சரிவுகளில் நடந்த இந்த சம்பவம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்திருக்கின்றன.

அதிகாரிகள் இது குறித்து விசாரணை ஒன்றை நடத்திவருவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த மூன்று மலையேறிகளும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகக் கூறப்படுகிறது.

இவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை ஒரு புதிய பாதை வழியாக அடைய முயன்றுகொண்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் மலைப்பாதையில், சுமார் 7500 மீட்டர் உயரத்தில் அவர்கள் மலை முகாம் ஒன்றை அணுகிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கும் உள்ளூர் வழிகாட்டிகளுக்கும் இடையே பதற்றம் மூண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஷெர்பாக்கள், தாங்கள் முதலில் மேலே சென்று, கயிறுகளைபாதுகாப்பாகக் கட்டிய பிறகு, மலையேறிகள் முன்னேறலாம் என்று கூறியதாகவும், ஆனால் மலையேறிகள் இந்த ஆலோசனையைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து முன்னேறியபோது, மலைச்சரிவுகளில் இருந்த பனிக்கட்டிகள் உடைந்து, ஷெர்பாக்கள் மீது விழுந்ததாக ஒரு தரப்பு கூறுகிறது.

ஆனால் வேறொரு நேபாளக் குழுவினர் பின்னர் இந்த முகாமில் நுழைந்து மலையேறிகளைத் தாக்கியதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன.

ஐரோப்பிய மலையேறிகள் இந்த சம்பவத்துக்குப் பின்னர், அடிவார முகாமுக்கு திரும்பிவிட்டனர். மீண்டும் மலையுச்சி சிகரத்தை அடைய மற்றுமொரு முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து அவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.