ஜின்னா பயன்படுத்திய விடுதி ஒன்று தகர்க்கப்பட்டது

பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள ஒரு சரித்துர முக்கியத்துவம் மிக்க நினைவிடத்தை பிரிவினைவாத தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.

ஒரு காவலாளியையும் அவர்கள் கொன்றிருக்கிறார்கள்.

பலுசிஸ்தானில் உள்ள, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஷியாரத் றெசிடென்ஸி என்னும் தங்கும் விடுதி பாகிஸ்தானின் ஸ்தாபகரான முஹமட் அலி ஜின்னாவினால் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

Image caption முன்னைய படம்

தனது கடைசிக்காலத்தை அவர் அங்குதான் செலவிட்டார்.

அங்கு ஏற்பட்ட தீயில் அதன் மரத்தினாலான உட்பகுதியும், ஜின்னா அவர்களின் ஏராளமான நினைவுப் பொருட்களும் அழிந்துபோயின.

சமூக ஊடகங்களில் இந்த நடவடிக்கையைக் கண்டித்த பலர் அதிர்ச்சியும் ஆத்திரமும் வெளியிட்டனர்.

இது பாகிஸ்தான் மீதே நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று அவர்கள் வர்ணித்திருந்தனர்.

பிரிவினைவாத தீவிரவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

மருத்துவமனை மீதும் தாக்குதல்

இதேவேளை, பலுசிஸ்தானில் குவெட்டா நகரில் மருத்துவமனை ஒன்றை ஆயுததாரிகள் தாக்கியுள்ளனர்.

மருத்துவமனையின் உள்ளே இருந்து குறைந்தபட்சம் ஒரு வெடிப்புச் சத்தமும் கேட்டிருக்கிறது.

கையெறி குண்டுகளை வைத்திருந்த தீவிரவாதிகள், அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினருடன் மோதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மூத்த அரச அதிகாரி ஒருவர் இதில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக 11 பல்கலைக்கழக மாணவிகள் பலியான ஒரு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த இளம் பெண்களுக்கு இந்த மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உட்பட பலுசிஸ்தானில் அண்மைக்காலமாக வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன.