முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு: நவாஸ் ஷெரிப்

கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் நவாஸ் ஷெரிப்
Image caption கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் நவாஸ் ஷெரிப்

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தேசத்துரோக வழக்கை சந்திக்க வேண்டும் என்று புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.

நாடு கடந்து வாழ்ந்துவந்த பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப் இந்த ஆண்டின் முற்பகுதியில் சொந்த நாட்டுக்குத் திரும்பியிருந்தார்.

'அவரது குற்றங்களுக்காக அவர் நீதிமன்றத்தின் முன்னால் பதிலளிக்க வேண்டும்' என்று பிரதமர் ஷெரிப் கூறியுள்ளார்.

முஷாரப் அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குறிப்பாக, பெனாசீர் பூட்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியமை, நீதிபதிகளை பதவி நீக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள முஷாரப் தற்போது வீட்டுக் காலில் வைக்கப்பட்டுள்ளார்.

Image caption நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை 1999-இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் கவிழ்த்தார் பர்வேஸ் முஷாரப்

பிரதமர் ஷெரிப்பை இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்திலிருந்து கவிழ்த்ததன் மூலம் முஷாரப் 1999-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார்.

பாகிஸ்தானில் தேசத்துரோக வழக்கினை அரசு மட்டுமே கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முஷாரப் இரண்டு தடவைகள் அரசியலமைப்பை மீறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமொன்றை அவர் 1999-ம் ஆண்டில் கவிழ்த்தார். எல்லாவற்றையுமே அழிவுக்கு கொண்டுசென்றார். நீதிபதிகளை பதவி நீக்கி சிறையிலடைத்தார்' என்று நவாஸ் ஷெரிப் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.