கென்யா: பணயக் கைதிகளைக் காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை

வர்த்தக வளாகத்தில் இருந்து புகை கிளம்புகிறது
Image caption வர்த்தக வளாகத்தில் இருந்து புகை கிளம்புகிறது

கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கென்யாவின் பாதுகாப்பு படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

கடுமையான துப்பாகிச் சத்தம் கேட்டுவருவதாக சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

கட்டிடத்திலிருந்து புகை கிளம்புவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.

கென்யாவின் விமான நிலையம் ஒன்றில் பயணிகள் சிலரை விசாரணைக்காக தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கென்யத் துருப்பினர் டஜன் கணக்கில் இந்த வர்த்தக வளாகத்தில் நுழைந்திருந்தனர்.

Image caption பணயக் கைதிகளைக் காப்பாற்ற துருப்பினர் போராடிவருகின்றனர்

வேடிக்கை பார்ப்பதற்காக வர்த்தக வளாகத்தை சுற்றிக் கூடியிருந்த பொதுமக்களை விரட்டுவதற்காக பொலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியிருந்தனர்.

அந்த இடத்திலுள்ள மக்கள் பாதுகாப்பை முன்னிட்டு விலகிச் செல்லுமாறு உள்துறை அமைச்சகம் சமூக வலைத்தளங்களிலும்கூட கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிது சிறிதாக படையினரின் கை ஓங்கிவருவதாகவும், வர்த்தக வளாகத்தின் பெரும்பாலான இடங்கள் துருப்பினர் வசம் வந்துவிட்டதாகவும், ஒரு சில பணயக் கைதிகள் மட்டுமே ஆயுததாரிகளின் பிடியில் எஞ்சியிருப்பதாகவும் கென்யாவின் காவல்துறைத் தலைவர் கூறியிருந்தார்.

பிரான்ஸ், ஹாலந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டவரும் கென்யப் பிரஜைகளுமாக 62 உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிறைய பேர் இன்னும் கணக்கில் வராமல் இருக்கின்றனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.

சொமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட கென்யா துருப்புகளை அனுப்பியதற்குப் பழிவாங்குவதற்காக தாம் இந்த தாக்குதலை நடத்தியதாக அல் ஷபாப் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் கூறுகின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்