பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

வீடுகள் நிர்மூலமாகின
Image caption வீடுகள் நிர்மூலமாகின

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆவாரன் என்ற ஒதுக்குப்புறமான மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் இரண்டாவதாக நடந்துள்ள நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலாவது பூகம்பம் ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

மஷ்கே என்ற இடம்தான் இம்முறை மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக நொக்ஜோ என்ற கிராமத்தில் பெரும்பான்மையான வீடுகள் நிர்மூலமாகி, அதில் வாழ்ந்தவர்கள் புதையுண்டு போயுள்ளனர் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவர் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று தாக்கிய நிலநடுக்கத்திலேயே இந்தப் பகுதியில் தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருந்தன என்றும் தற்போது அவை முற்றாக அற்றுப்போய்விட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

செவ்வாயன்று ஆவாரன் மாவட்டத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் நானூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அமைச்சராக இருக்கும் லெஃப்டினண்ட் ஜெனரல் அப்துல் காதிர் பலுச் நேற்று வெள்ளியன்று நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.