போர்க்குற்றம்: வங்கதேச முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை

Image caption வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அப்துல் ஆலிம் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான (பிஎன்பி) வங்கதேச தேசியவாதக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு போர்க்காலக் குற்றச்செயல்களுக்காக ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு 1971-இல் நடந்த சுதந்திரப் போரின்போது நூற்றுக்கணக்கான இந்துக்களை கொன்றக் குற்றச்சாட்டிலேயே சிறப்பு நீதிமன்றமொன்று இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

பெருமளவிலான கூட்டுப் படுகொலைகளைப் புரிந்த ஆயுதக்குழுவொன்றை இந்த முன்னாள் அமைச்சர் வழிநடத்தியுள்ளதாக அரசதரப்பு வழக்குரைஞர்கள் குற்றஞ்சாட்டினர்.

தற்போது சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அப்துல் ஆலிமுக்கு 83 வயதாகிறது.

அவரது வயதையும் உடல்நிலையையும் கருத்தில்கொண்டு மரண தண்டனை அளிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பிஎன்பி கட்சியின் இன்னொரு மூத்த உறுப்பினரான சலாஹுதீன் காதர் சௌத்ரிக்கு மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்காக மரண தண்டனை அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருந்தன.

வங்கதேசத்தின் முக்கிய இஸ்லாமிய வாதக்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி-யின் 6 தலைவர்களும் இதே நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக கடந்த சில மாதங்களில் அறிவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்புகளுக்கு எதிராக நடந்துள்ள வன்முறை போராட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.