மத்திய பிரதேசத்தில் துர்கா பூஜா சனநெரிசலில் 89 பேர் பலி

Image caption இந்தியாவில் கோயில் வழிபாடுகளின்போது அதிக சனக்கூட்டம் காரணமாக ஏற்படும் நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழப்பது பல தடவைகள் நடந்துள்ளன.

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயிலொன்றில் ஏற்பட்ட திடீர் சனநெரிசலில் சிக்கி குறைந்தது 89 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

டாட்டியா மாவட்டத்தில் ரத்தன்கார் கோயிலில் துர்கா பூஜா வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட திடீர் சனநெரிசலில் சிக்கியே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.

பலர் அருகிலுள்ள ஆற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

திடீர் சனநெரிசலுக்கு என்ன காரணம் என்று சரியாகத் தெரியவரவில்லை. ஆனால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியதையடுத்தே சனநெரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கோயில் வழிபாடுகளின் போது அடிக்கடி இவ்வாறான சனநெரிசல் உயிரழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.

கடந்த ஆண்டில் வட இந்தியாவில் கும்ப மேளா வழிபாட்டின்போதும் குறைந்தது 36 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.