சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் ஃபுக்குஷிமா அணு உலை

Image caption கதிரியக்கப் பொருள் கலந்த நீர் வெளியேறாமல் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

ஜப்பானை தாக்கவுள்ள சக்திமிக்க சூறாவளியொன்றை எதிர்கொள்வதற்கு ஃபுக்குஷிமா அணுமின் நிலைய பணியாளர்கள் தயாராகிவருகின்றனர்.

புதன்கிழமையன்று அதிகாலையில் ஜப்பானைத் தாக்கவுள்ள வீஃபா புயல்மழை மூலம் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளது.

2011-ம் ஆண்டில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரலைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஃபுக்கிஷிமா அணுமின் நிலையத்தை அண்டியே இம்முறை வீஃபா சூறாவளியும் வீசவுள்ளது.

வெள்ளம் பெருக்கெடுக்கக்கூடிய அபாயமுள்ள இடங்களை கண்காணிப்பதற்காள ஏற்பாடுகளை செய்துள்ளதாக டோக்யோ இலக்ட்ரிக் பவர் கம்பனி கூறுகிறது.

கதிரியக்க தாக்கத்துக்கு உள்ளாகும் நீர் வெள்ளநீரில் அள்ளுண்டு வெளியேறாமல் பெருமளவில் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கான வேலைகளும் நடந்துவருகின்றன.

அண்மைய காலங்களில், அங்கு கதிரியக்கப் பொருட்கள் கலந்த நீர் பெருமளவில் கசிந்துள்ள சம்பவங்கள் பல பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.