பிரிட்டனின் முதலாவது புதிய அணுமின் நிலையத்துக்கு அரசு இணக்கம்

பிரிட்டனில் இந்த தலைமுறையின் முதலாவது புதிய அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் முன்னணி மின்சக்தி நிறுவனமான ஈடிஎஃப் தலைமையிலான நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்த அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கவுள்ளது.

ஈடிஎஃப் நிறுவனத்தில் சீன முதலீட்டாளர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்-மேற்கு இங்கிலாந்தில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள இந்த அணுமின் நிலையத்திலிருந்து நாட்டின் மின்சக்தி தேவையின் 7 வீதத்தை பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரிட்டன், இயற்கைவழி எரிபொருட்களில் தங்கியிராமல் கார்பன் குறைந்த எரிசக்தி பாவனையை நோக்கிச் செல்வதற்கு இந்த அணுமின் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த அணுமின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம், தற்போதைய சந்தை விலையிலும் பார்க்க இரட்டை மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்படும் என்றும், அதுவும் 35 ஆண்டுகளுக்கு அந்த விலையில் மாற்றம் இருக்காது என்றும் வெளியாகியுள்ள விமர்சனங்களை பிரதமர் டேவிட் கேமரன் நிராகரித்துள்ளார்.