' ஜெர்மன் தலைவர் ஏங்கலா மெர்க்கல் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது'

  • 24 அக்டோபர் 2013

ஜெர்மனிய ஆட்சித்தலைவியான ஏங்கலா மெர்க்கல் அவர்களின் செல்லிடத்தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சு அமெரிக்க தூதுவரை தம்முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒரு வழமைக்கு மாறான நடவடிக்கையாக அமெரிக்கத்தூதுவர் ஜோண் எமர்சன் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் குயிடோ வெஸ்டர்வெல்லை இன்று மாலையில் சந்திப்பார்.

இந்த விவகாரம் தொடர்பில் புதனன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேசிய மெர்க்கல் அவர்கள், இது நம்பிக்கையை மீறும் செயல் என்று கூறியுள்ளார்.

மெர்க்கல் அவர்களுக்கு வந்த அழைப்புக்களை தாம் கண்காணிக்கவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, ஆனால், கடந்த காலத்தில் அவற்றைக் கேட்டதை மறுக்கவில்லை.

அமெரிக்காவால் கண்காணிக்கப்படுவதில் இருந்து தவிர்ப்பதற்காக ஐரோப்பா, ஒரு புதிய டிஜிட்டல் பொறிமுறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று உள்ளக சந்தை மற்றும் சேவைகளுக்கான ஐரோப்பிய ஆணையர் மைக்கல் பார்னியர் கூறியுள்ளார்.