ஆஸி. காட்டுத் தீ: இராணுவத்திடம் நட்டஈடு கோருகிறார் முதல்வர்

Image caption காட்டுத் தீயில் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்பில் இராணுவத்திடமிருந்து நட்டஈடு கோருவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக மாநிலத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல இடங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிடத்தில் பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு தாமே காரணம் என்பதை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக முதல்வர் பார்ரி ஓ'ஃபாரல் கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்தக் காட்டுத் தீயில் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளதுடன் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் ஆயுதப் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்ததை அடுத்து இராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது.