இளவரசர் சார்ல்ஸ் புதிய மன்னராவதில் ஆர்வமின்றி காணப்படுகிறார்?

Image caption டைம் சஞ்சிகையில் வந்துள்ள கருத்துக்கள் இளவரசர் சார்ல்ஸின் நேரடிக் கருத்துக்களாக கருதப்படக்கூடாது என்று அவரது அலுவலகம் கூறுகிறது

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ல்ஸ், தனது தாயாரான எலிசபெத் மகாராணியாரிடமிருந்து நாட்டின் அடுத்த மன்னராக பதவியை பொறுப்பேற்பதில் பெரிய அளவில் அக்கறையுடன் இல்லை என்று அவரது அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

இளவரசர் சார்ல்ஸ் அரச குடும்பத்தின் கடமையை பொறுப்பேற்கும் விடயத்தில் 'விருப்பமின்றியே' காணப்படுகிறார் என்று பெயர் குறிப்பிடப்படாத அரசகுடும்ப அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி டைம் சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரை கூறுகிறது.

தனக்கு தற்போதுள்ள பணிச் சுமைகளுடன் நாட்டின் மன்னராக வருவதில் உள்ள சிரமங்கள் பற்றி இளவரசர் சார்ல்ஸ் கவலைப்படுவதாகவும் அந்த அரச குடும்ப அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மன்னர் பொறுப்பு என்ற சிறையின் நிழல்கள் தன்னை நெருங்க முன்னர் முடியுமான அளவுக்கு தனது தொண்டு வேலைகளை முடித்துக்கொள்ள இளவரசர் விரும்புவதாக அரச குடும்ப தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்தக் கருத்துக்களை இளவரசரின் கருத்துக்களாக கருதக்கூடாது என்று இளவரசர் சார்ல்ஸின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.