போர்க்குற்றம்: வெளிநாடுவாழ் வங்கதேசத்தவர்கள் இருவருக்கு மரண தண்டனை

Image caption 1971-இல் நடந்த வங்கதேச சுதந்திரப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை இந்த சர்வதேச தீர்ப்பாயம் விசாரித்து தீர்ப்பளித்துவருகிறது

வங்கதேசத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு தீர்ப்பாயமொன்று வெளிநாடுகளில் வாழும் இரண்டு வங்கதேசத்தவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1971-ம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரின்போது கல்வியியலாளர்களும் ஊடகவியலாளர்களுமாக 18 பேரின் படுகொலைகளில் பங்கெடுத்தமைக்காகவே இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரிட்டனில் வாழும் சௌத்ரி முயீன் உதின் என்பவரும் அமெரிக்கப் பிரஜையான அஷ்ரஃபுஸாமான் கானும் பாகிஸ்தானுக்கு உதவிய ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் தீர்ப்பாயத்திடம் சுட்டிக்காட்டினர்.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக வங்கதேசத்துக்கு வருமாறு இருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால் இருவரும் அங்கு செல்ல மறுத்த காரணத்தினால் அவர்களின் பிரசன்னம் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடைபெற்றது.

தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இருவரும் இந்த வழக்கு விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.