காங்கோ: எம்23 இயக்கம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது

Image caption அரச படைகளின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத எம்23 இயக்கதின் இறுதிப் போராளிகள் சரணடைந்துவிட்டனர் அல்லது அண்டை நாடுகளுக்குள் தப்பிவிட்டனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்(படம்: காங்கோ இராணுவத்தினர்)

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எம்23 கிளர்ச்சி இயக்கத்தினர் தங்களின் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ஐநா படையினரின் ஆதரவுடன் அரச படையினர் முன்னெடுத்த படைநடவடிக்கையின் காரணமாக எம்23 இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை இழந்துவிட்டனர்.

இந்த நிலையிலேயே, அவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

ஆயுதங்களை கைவிட்டு, போராட்ட இயக்கத்தையும் கலைத்துவிடுவதாக அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இனிமேல் தங்களின் இலக்குகளை அரசியல் வழிமுறைகள் மூலமே முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

'இனி அரசியல் வழிகளில் பயணம்'

முன்னதாக, கடைசிப் போராளிகளும் சரணடைந்துவிட்டார்கள் அல்லது அண்டையிலுள்ள உகாண்டா அல்லது ருவாண்டாவின் எல்லைகளுக்குள் தப்பியிருப்பார்கள் என்று காங்கோ அரச பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கடந்த திங்களன்று தென்னாப்பிரிக்காவில் கூடிய ஆப்பிரிக்கத் தலைவர்கள், எம்23 இயக்கத் தலைவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தால் அமைதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட முடியும் என்று அறிவித்திருந்தனர்.

இந்த மாநாட்டில் ருவாண்டா அதிபர் பால் காகாமே கலந்துகொள்ளவில்லை. அவர் எம்23 இயக்கத்தை ஆதரித்ததாக வெளியான குற்றச்சாட்டுக்களை அவர் மறுக்கிறார்.