அராபத் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது

Image caption மரணத்தில் நீடிக்கும் மர்மம் -- கதிரியக்க நஞ்சூட்டலா ?

பாலத்தீனத் தலைவர் யாசர் அராபத் , பொலோனியம் என்ற கதிரியக்கத் தன்மை கொண்ட பொருளால் நஞ்சூட்டப்பட்டு இறந்தார் என்று தம்மால் உறுதியாகக்கூறமுடியாது என்று சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் அதே சமயத்தில், அவர்களது அறிக்கை வந்து ஒரு நாளைக்குப் பின், 2004ம் ஆண்டில் அராபத் இறந்ததற்கு பொலோனிய விஷம் ஒரு காரணமாக இருக்கலாம் , விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதை நிராகரிக்க முடியாது என்ற தங்களது முடிவை மீண்டும் இந்த விஞ்ஞானிகள் வலியுறுத்தினர்.

தோண்டியெடுக்கப்பட்ட அராபத்தின் உடலை ஆராய்ந்த இந்த வல்லுநர்களின் அறிக்கை, அவரது உடலில் சாதாரணமாக இருக்கும் அளவை விட போலோனியம் 18 மடங்கு அதிகமாகக் காணப்பட்டதாகக் கண்டறிந்திருக்கிறது.

அவரது மனைவி, சுஹா, பிபிசியிடம் பேசுகையில், இந்த அறிக்கை, அராபத் படுகொலை செய்யப்பட்டார் என்ற தனது நம்பிக்கையை மெய்ப்பிப்பதாக உள்ளது என்றார்.

ஆனால் தன்னால் இதற்கு பொறுப்பாளியாக யாரையும் குற்றம் சுமத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். அராபத்துக்கு உலகெங்கிலும் பல விரோதிகள் இருந்தனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்