ஹாய்யான் சூறாவளியில் பிலிப்பைன்ஸில் குறைந்தது 120 பேர் பலி

Image caption மத்திய பிலிப்பைன்ஸில் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன

பிலிப்பைன்ஸில் கரைகடந்துள்ள மிக சக்திவாய்ந்த ஹாயன் சூறாவளியில் சிக்கி பெருமளவிலானோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

டக்லோபான் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

புயலில் சின்னாபின்னமாகியுள்ள இந்த நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

விமானநிலையம் உள்ளிட்ட அனேகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இராணுவ விமானங்களைத் தவிர சிவில் விமானங்கள் வரமுடியாதபடி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

அண்டை நகரான பாலோவில் அவசரகால முகாமொன்றின் கூரை பிடுங்கி எறியப்பட்டதில் மேலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

சமார் தீவில் உள்ள குயூவான் நகரில் சூறாவளி தாக்கியுள்ள நகருடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறுகின்றது.

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. முழுமையான சேதவிபரங்கள் தெரியவர பலநாட்கள் எடுக்கும் என்று கூறப்படுகின்றது.