பெய்ரூட்டில் இரட்டை குண்டுத் தாக்குதல்-20 பேர் பலி

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 150 பேர் அளவில் காயமடைந்துள்ளனர்.

Image caption தாக்குதல் நடைபெற்ற இடம்

இந்தத் தாக்குதலில் அங்குள்ள இரானியத் தூதரகத்தின் வெளிச்சுவரும் சேதமடைந்துள்ளது.

நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதலில் இரானியத் தூதரகத்தில் கலாச்சாரத்துறைக்கு பொறுப்பான உயரதிகாரியும் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட கானொளிக் காட்சிகளில் பெரிய அளவுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது, வாகனங்கள் எரிவது, தீயில் கருகிய உடல்கள் மற்றும் புகை மண்டலம் ஆகியவற்றை காணக் கூடியதாக இருக்கிறது.

இந்தத் தாக்குதலில் ஒரு மோட்டார்பைக்கும் ஒரு காரும் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Image caption இரானிய தூதரமும் தாக்குதலுக்கு உள்ளானது.

சிரியாவின் அரசுக்கு பெரிய அளவுக்கு ஆதரவு அளிக்கும் இரான் மற்றும் ஹெஸ்பொல்லா ஆகியோருக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

லெபனானின் எல்லை வழியாக சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்பும் கடைசி ஒரு பாதையையும் முடக்க சிரியா நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது.