தேஜ்பால் மீது பாலியல் வல்லுறவு முயற்சி வழக்கு

Image caption தேஜ்பாலுக்கு எதிராக பாலியல் வல்லுறவு முயற்சி வழக்கு

பாலியல் வன்முறை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கோவா போலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டெஹல்கா இதழின் ஆசிரியர், தருண் தேஜ்பாலின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை டெல்லி காவல் துறையினர் விரைந்துள்ளனர்.

டெல்லி காவல் துறையினர் சென்றதன் காரணம் உடனடியாக தெரியவில்லை.

'தெஹல்கா' பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அந்தப் பத்திரிகையில் வேலை செய்யும் பெண் பத்திரிகையாளர், பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இந்த விசாரணை ஒரு புறமிருக்க, இந்த சம்பவம் தொடர்பாக, பாலியல் பலாத்கார முயற்சி செய்தார் என்று தேஜ்பால் மீது வழக்கு ஒன்றை கோவா காவல் துறை பதிவு செய்திருக்கிறது.

புலனாய்வு பத்திரிக்கையான 'தெஹல்கா'வின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக அவருடன் இணைந்து பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு எழுதிய மின்னஞ்சலில் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து தருண் தேஜ்பால் தனது பதவியில் இருந்து ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக விலகுவதாக நிர்வாக ஆசிரியரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற ஹோட்டலின் சிசிடிவி காணொளியை கைப்பற்றியுள்ளதாக அந்த பகுதியின் காவல் துறை துணை அதிகாரி ஒ.பி மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

அந்த காணொளியை கண்டு தீர விசாரித்த பின்னரே எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியும் என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊடகவியலாளர், நிறுவனத்திற்கு எழுதிய மின் அஞ்சல் போன்ற ஆவணங்களை அந்நிறுவனத்திடம் காவல் துறையினர் கோரியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் தேஜ்பால் விசாரணை குறித்த அறிக்கையை கோவா காவல் துறையிடம் கோரியுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் தற்போது கூறியுள்ளார்.