பிரிட்டன் : 'ஊழலால் மலிந்த சில சிறுபான்மைச் சமூகங்கள்'

பிரிட்டனின் சட்டமா அதிபரான டொமினிக் கிறீவ்
Image caption பிரிட்டனின் சட்டமா அதிபரான டொமினிக் கிறீவ்

பிரிட்டனில் வாழும் சில சிறுபான்மைக் குழுக்கள் மத்தியில் இருக்கும் ஊழல் போக்குக் குறித்து பிரித்தானிய அரசியல்வாதிகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டனின் சட்டமா அதிபரான டொமினிக் கிறீவ் கூறியுள்ளார்.

டெய்லி டெலிராஃப் பத்திரிகைக்கு பேசியுள்ள கிறீவ் அவர்கள், இந்தக் குற்றச்சாட்டை எந்தவொரு தனி சிறுபான்மைக்கும் மட்டுப்படுத்தத் தேவையில்லை என்று கூறியிருந்தாலும், பாகிஸ்தானிய சமூகத்தை பெரிதும் அவர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

ஒரு தரப்புக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் கலாச்சாரத்துக்கு பிரிட்டனில் இடம் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், கிறீவ் அவர்கள் சமூகங்களின் மத்தியில் பிளவை ஏற்படுத்த விளைவதாக ஒரு பாகிஸ்தானில் பிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானிய சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டுவதில் தயக்கம் காட்டும் கிறீவ் அவர்கள், வெள்ளையின அங்கிலோ சாக்ஸன் சமூகத்திலும் அது இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

ஊழல் என்பது ஒரு தொற்று நோயாகப் பரவியிருக்கும் சில நாடுகளில் இருந்து சில குடியேறிகள் பிரிட்டனில் குடியேறியிருப்பதையும் கிறீவ் சுட்டிக்காட்டுகிறார்.

அத்தகைய சில நாடுகளில் ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் அது ஊழலால் மாத்திரமே சாத்தியம் என்ற நம்பிக்கை நிலவுவதாகவும் அவர் கூறுகிறார்.

அத்துடன் பிரிட்டனில் சில தேர்தல் முறைகேடுகளிலும் சிறுபான்மை சமூகங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.