'தொழில் தர்மம்' கொண்ட பிக் பாக்கெட் திருடன்

  • 25 நவம்பர் 2013
Image caption சீனாவில் பரபரப்புடன் இயங்கும் அங்காடி ஒன்று

சீனாவில் ஐபோன் (iPhone) கைத் தொலைபேசி ஒன்றை ஒருவரிடமிருந்து களவாடிய பிக் பாக்கெட் திருடன் ஒருவன், அந்தத் தொலைபேசியிலிருந்த தொடர்பு விபரங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளருக்கு அனுப்பிவைத்துள்ளான்.

அத்தோடு சேர்த்து தொலைபேசியின் சிம் கார்ட்-ஐயும் உரிமையாளருக்கு அந்தத் திருடன் தபாலில் அனுப்பிவைத்துள்ளான்.

தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் அனைத்தையும் 11 பக்கங்களுக்கு கையால் எழுதி அவன் அனுப்பிவைத்துள்ளான்.

கிட்டத்தட்ட 1000 பேரின் விபரங்கள் இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அரச செய்தி ஊடகம் கூறுகிறது.

தொலைபேசியை பறிகொடுத்த உரிமையாளர், திருடனின் இந்தச் செயலால் ஆச்சரியமடைந்துள்ளார்.

மைக்ரோ ப்ளோகிங் எனப்படும் குறுந்தகவல்களை வெளியிடும் சீனாவின் (Sina Weibo) சினா வேய்போ நுண்வலைப்பூ பதிவாளர்கள், இந்தச் செய்தியை பாராட்டி குறிப்பெழுதியுள்ளார்கள்.

இந்தத் திருடன் 'நம்பிக்கைக்குரிய', 'அனுதாபம் மிக்க' நபர் என்று ஒருவர் எழுதியுள்ளார்.

'தொழில் தர்மத்தை' மதிக்கும் திருடன் என்றும் ஒருவர் பாராட்டியுள்ளார்.