இங்கிலாந்து கால்பந்தில் மேட் பிக்சிங்: ஆறு பேர் கைது

Image caption இங்கிலாந்து கால்பந்தில் மேட்ச் பிக்சிங் முயற்சி: ஆறு பேர் கைது ( ஆவணப்படம்)

இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது மூன்று பேர் கால்பந்து விளையாட்டு வீரர்கள்.

ஆனால் இவர்களில் எவரும் தொழில்முறை கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்று பிபிசிக்கு தெரிய வந்திருக்கிறது.

இந்த நடவடிக்கையின் கவனம் ஒரு சர்வதேச சட்டவிரோத சூதாட்டக் குழுவினரே என்று போலிசார் கூறுகின்றனர்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி டெலெகிராப்" பத்திரிகை ரகசியமாக நடத்திய புலன் விசாரணையினை அடுத்து இந்தக் கைதுகள் வருகின்றன.

ஆசியாவில் இருந்து இயங்கும் இந்தப் பந்தயச் சூதாடிகள் பிரிட்டனில் நடக்கும் விளையாட்டுகளைக் குறிவைப்பதாகவும், கீழ் மட்டத்தில் நடக்கும் லீக் பந்தயங்களை அவர்களால் 80,000 டாலர்களுக்கு முன் கூட்டியே தீர்மானித்து நடத்த முடிவதாகவும் அந்தப் பத்திரிக்கை கூறியது.