25-வது உலக எயிட்ஸ் தினம் இன்று அனுட்டிப்பு

Image caption உலகெங்கிலும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்துள்ளன

உலகளாவிய சுகாதார அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் 25வது உலக எயிட்ஸ் தினத்தை இன்று அனுட்டிக்கின்றன.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் கூட்டங்களும் உலகெங்கிலும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொடிய நோயான எயிட்ஸ் தொற்று கட்டுப்படுத்தப்படக் கூடிய நிலையின் தொடக்கத்தில் இருப்பதாக ஹெச்ஐவி/எயிட்ஸ் தொடர்பான ஐநா நிகழ்ச்சித் திட்டத்தின் தலைமை இயக்குநர் மிச்சல் சிடிபெ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எயிட்ஸ் மற்றும் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைக்கும் போக்கு இன்னும் சமூகத்தில் நிலவுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 34 மில்லியன் பேர் (3 கோடியே 40 லட்சம்) ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பர்மிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூசி, தமது நாட்டில் ஹெச்ஐவி நோயாளிகள் மீது காட்டப்பட்டும் பாரபட்சம் பற்றி உலகின் கவனத்துக்குக் கொண்டுவரும் முகமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சிறப்பு உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.