வறிய நாடுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க 160 நாடுகள் ஒப்பந்தம்

Image caption அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது

உலகிலுள்ள வறிய நாடுகள், தங்களின் பொருட்களை விற்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உலக வணிகத்தை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

சுமார் 160 நாடுகளின் வணிகத் துறை அமைச்சர்கள், வரலாற்று ரீதியான இந்த வஉடன்பாட்டை எட்டியுள்ளனர்.

இந்தோனேசியாவில் கூடிய உலக வர்த்தக ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், வணிகத்தில் நிலவும் இறுக்கமானமான அரச கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்புகளில் தளர்வுகளைக் கொண்டுவர இணக்கம் கண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி டாலர்கள் பணத்தை உலக பொருளாதாரத்தில் சேர்க்க முடியும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் சுமார் இரண்டு கோடி தொழில்கள் உருவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளைக் குறைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றும் சில செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய இணக்கப்பாடுகளை எட்டுவதில் சிரமங்களை சந்தித்துவந்த உலக வர்த்தக ஸ்தாபனத்திற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான முன்னகர்வு என்று இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேசமயம், உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட 160 நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் புதிய சர்வதேச ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கே அதிக நன்மைகள் செய்யும் என்றும், இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு உணவுமானியம் தவிர்த்த மற்ற துறைகளில் அதிக பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக பொருளாதார புள்ளியியல் துறை பேராசிரியர் ஆர் சீனிவாசன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை