வெளிநாட்டவர்கள் குவித்த ஊழல் சொத்தை பிரிட்டன் பறிக்க வேண்டும்

Image caption பிரிட்டன் மேலும் வீரியமான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல்

பிரிட்டனில், ஊழல் மோசடிகள் மூலம் செல்வச் செழிப்பைப் பெற்றுள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீளப்பெற அரசாங்கம் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோதச் சொத்துக்களை கண்டுபிடித்து முடக்குவதற்கு இன்னும் ஆணித்தரமான, வீரியமான நடவடிக்கைகள் அவசியம் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இந்த சட்டவிரோத சொத்துக்கள் சர்வதேச நிதிக் கட்டமைப்புகளுக்குள் கலந்துவருவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

முன்கூட்டியே கண்காணிப்புடன் கூடிய செயற்பாட்டுக்கும் ஊழல் பேர்வழிகள் அதிகாரத்தில் இருந்து வெளியேற முன்னர் நடவடிக்கை எடுப்பதற்கும் பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இக்விட்டோரியல் கினி அதிபரின் மகன் தொடர்பில் பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளமையையும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.