பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டன
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிங்கப்பூரில் அமைதி திரும்பியது

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு இப்போது அமைதி திரும்பியுள்ளது. கலவரம் தொடர்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தின் கீழ் சிக்கிய 33 வயதான இந்தியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கே வன்முறை வெடித்தது.

சுமார் 400 வெளிநாட்டு பணியாளர்கள், தெருவில் இறங்கி கற்களை வீசித் தாக்கினர். காவல்துறை வாகனங்களை தீ வைத்து எரித்தனர். ஒரு அம்புலன்சும் எரிக்கப்பட்டது. இந்த தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள்.

இதுபோன்றதொரு வன்முறைச் சம்வம் சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்திருக்கவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்

எச்சரிக்கை

Image caption கலவரம் நடந்த பகுதியில் காவல்துறையினர்

தெருவில் இறங்கி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க சிங்கப்பூர் சட்டம் வழி செய்கிறது. இது தவிற அப்படிச் செய்யும் நபர்களுக்கு கசையடியும் கிடைக்கும்.

கலவரத்துக்கு காரணமானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள சூழல் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் தூதரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கீழ் மட்டத்தில் இருக்கும் வேலைகளை வெளிநாட்டு ஊழியர்களே பெரும்பாலும் செய்கின்றனர். கடந்த ஆண்டு பஸ் ஒட்டுனர்களாக பணிபுரியும் சீனர்கள் நடத்திய வேலை நிறுத்தம், கீழ் மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.