மண்டேலாவின் இறுதி நிகழ்வுக்கு அனுமதி இல்லை: டெஸ்மன் டூட்டு

பேராயர் டெஸ்மன் டூட்டு
Image caption பேராயர் டெஸ்மன் டூட்டு

தென்னாபிரிக்காவின் கேப் டவுன் முன்னாள் பேராயரான டெஸ்மன் டூட்டு, தனக்கு முறையான நுழைவு அனுமதி கிடைக்கவில்லை என்பதால் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை ரத்துசெய்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தனக்கு அழைப்பு கிடைத்திருந்தால் 'அந்த இறுதி நிகழ்வை தவறவிடுவதற்கான காரணங்களே இந்த உலகில் இருந்திருக்காது' என்று அவரது வார்த்தைகளில் குறிப்பிட்டு டெஸ்மன் டூட்டு அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

முன்னதாக, தென்னாபிரிக்க அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர், பேராயர் டூட்டுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நெல்சன் மண்டேலாவின் நீண்டகால நண்பரும் நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மன் டூட்டு, தற்போதைய தென்னாபிரிக்க அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை நல்லடக்கம்

Image caption மண்டேலாவின் உடல் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம்

இதனிடையே நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக அவரின் சொந்த ஊரான குனு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று நல்லடக்கம் நடைபெறவுள்ளது. மதாதா விமான நிலையத்தில் இருந்து அவரது உடல் வைக்கப்பட்ட பெட்டி சாலை வழியாக எடுத்து வரப்பட்டபோது, அதைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.

இராணுவ வாகனங்கள் மற்றும் காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புக்கு மத்தியில் நெல்சன் மண்டேலாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, அவரின் உடல் தலைநகர் பிரிடோரியாவில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.