லண்டன் நாடகக் கொட்டகை கூரை இடிந்து பலர் காயம்

Image caption கூரை இடிந்து விழுந்த லண்டன் நாடகக் கொட்டகை

லண்டன் நகரில் நாடகக் கொட்டகை ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 76 பேர் காயமடைந்தனர்.

இதில் ஏழு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நாடகம் நடந்து கொண்டிருந்த இந்த மத்திய லண்டன் கொட்டகையில், வியாழனன்று மாலை ஜிஎம்டி நேரப்படி 8.15 மணிக்கு, கூரை இடிந்து விழுந்த போது, சுமார் 720 பேர் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

கூரை இடிந்து விழுந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர்.

கொட்டகையில் இருந்த அலங்காரமான பிளாஸ்டர் வேலைப்பாடுடன் கூடிய கூரைப்பகுதி இடிந்து விழுந்த போது ஒளி விளக்குத் தூணும் இடிந்து விழுந்தது என்று கூறப்படுகிறது.

யாரும் கொல்லப்படவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வண்டிகளும், போலிசாரும் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த அப்போல்லோ தியேட்டர் 1901ல் திறக்கப்பட்டது. " தெ க்யூரியஸ் இன்சிடண்ட் ஒப் தெ டாக் இன் தெ நைட்-டைம்" ( The curious incident of the Dog in the Night-Time )என்ற நாடகம் விபத்து நடந்தபோது நடந்துகொண்டிருந்தது.