தென் சூடானில் தாக்குதல்: 3 இந்திய அமைதிப் படையினர் பலி

Image caption தென் சூடானில் அமைதிக்குலைவு

தெற்கு சூடானின் ஜோங்லெய் மாகாணத்தில் ஐநா மன்ற வளாகத்தின் மீது நடந்த தாக்குதல் ஒன்றில், அங்கிருந்த மூன்று இந்திய அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்.

இத்தகவலை நியுயார்க்கில் நடந்த ஐநா மன்ற அமைதிகாப்புக் கூட்டம் ஒன்றில் ஐ.நா மன்றத்துக்கான இந்தியத் தூதர் அசோக் முக்கர்ஜி வெளியிட்டார்.

சம்பவம் நடந்த அகொபோ நகரில் இருக்கும் ஐ.நா மன்ற கட்டிடத்தில் 43 இந்திய அமைதிப் படையினர் இருந்தனர் .

அந்த கட்டிடத்தில் புகலிடம் கோரியிருந்த 32 டிங்கா இன சிவிலியன்களை , நுயெர் இனக் குழுவினர் இலக்கு வைத்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இந்தக் கட்டிடத்தில் இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரு இனக்குழுக்களிடையே ஏற்படக்கூடிய சாத்தியக்கூறான உள்நாட்டுப் போர் குறித்து ஐ.நா மன்றம் கவலை வெளியிட்டுள்ளது.

தென் சூடானில், அதிபர் சல்வா கீர், அவரது முன்னாள் துணை அதிபர் ரியக் மச்சார் அதிரடிப் புரட்சி ஒன்றைத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டியதிலிருந்தே அங்கு பெருங்கொந்தளிப்பு நிலவுகிறது.

ஞாயிறன்று வெடித்த இந்த மோதல்களில் இது வரை சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்